IND vs SL: 3 பந்தில் முடிந்த சூப்பர் ஓவர்.. இலங்கையை கதற விட்ட தமிழக பவுலர்.. என்ன நடந்தது?
பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இரண்டு அணிகளும் 20 ஓவர்களின் முடிவில் சரிசமமாக 137 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி சார்பில் சூப்பர் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளிலேயே இரண்டு விக்கெட்களை இழந்து சூப்பர் ஓவரை முழுமையாக ஆடும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி. சுந்தரின் அபார பந்துவீச்சில் பெரிய ஷாட் ஆட ஆசைப்பட்டு விக்கெட்களை இழந்தது இலங்கை.

அந்த அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அடுத்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது. சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஒரு ஃபோர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். முன்னதாக இலங்கை அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் படுமோசமான விக்கெட் சரிவை சந்தித்து தோல்வி அடைந்தது.
முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டிக்கு முன்னதாக இரு நாட்களாக மழை பெய்திருந்ததால் ஆடுகளம் உறைகளால் மூடப்பட்டிருந்தது. அதனால், பிட்ச்சில் ஈரத்தன்மை இருந்தது. அதன் காரணமாக பிட்ச் மந்தமாக இருந்ததை அடுத்து இந்திய வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
ஜெய்ஸ்வால் 10, சஞ்சு சம்சன் 0, ரிங்கு சிங் 1. சூர்யகுமார் யாதவ் 8, சிவம் துபே 13 ரன்கள் மட்டுமே எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தனர். துவக்க வீரர் சுப்மன் கில் நிதானமாக ஆடி 39 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் ரியான் பராக் 18 பந்துகளில் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் 25 ரன்களும் சேர்த்தனர். இதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
138 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி மிக அபாரமாக சேஸிங் செய்தது. அந்த அணி 15 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளைப் போலவே இப்போதும் அந்த அணி மிக மோசமான விக்கெட் சரிவை சந்தித்தது.
கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் அந்த அணி ஏழு விக்கெட்களை இழந்தது. அதிலும் 19வது ஓவரை ரிங்கு சிங்கும், 20வது ஓவரை சூர்யகுமார் யாதவும் வீசினார்கள். இவர்கள் இருவரும் இந்த தொடரில் இப்போதுதான் முதன்முறையாக பந்து வீசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்த சூழ்நிலையில் 19 வது ஓவரை வீசிய ரிங்கு சிங் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
அதேபோல, சூர்யகுமார் யாதவ் கடைசி ஆறு பந்துகளில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் 137 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது.
அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் முதல் பந்தை வைடாக வீசினார். அடுத்த பந்தில் இலங்கை வீரர்கள் ஒரு ரன் எடுத்தனர். அதற்கு அடுத்த இரண்டு பந்துகளிலும், இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர். சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்தால் பேட்டிங் செய்யும் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலையில், இலங்கை அணி சூப்பர் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்ததால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications