மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்க உள்ள முதல் சுற்றுப்பயணம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. அடுத்த கேப்டனுக்கான ரேசில் ஹர்திக் பாண்டியா முன்னிலையில் இருந்த நிலையில், திடீரென சூர்யகுமார் பெயரும் உச்சரிக்கப்பட தொடங்கியது.

அதேபோல் தேர்வு குழுவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்த அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ரிங்கு சிங், ரியான் பராக், சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், கலீல் அஹ்மத், சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய 3 வீரர்களின் இடங்களுக்கும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.