பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். அவரது ஆட்டத்தால் இலங்கை பந்துவீச்சாளர்கள் அரண்டு போனார்கள். எப்படி பந்து வீசினாலும் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடிப்பதை நிறுத்தவில்லை.
ரிஷப் பண்ட் ஒருபுறம் நிதானமாக ஆடிய நிலையில் அவருக்கும் சேர்த்து சூர்யகுமார் யாதவ் அதிரடியில் பட்டையை கிளப்பினார். அதனால், இலங்கை நிலை குலைந்தது. மேலும், சூர்யகுமார் யாதவ் அதிவேக அரைசதம் அடிப்பதில் புதிய சாதனை ஒன்றையும் செய்தார்.

இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 16 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணியை கதி கலங்க வைத்தார். அவர் 22 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்து இருந்தார்.
இது அவரது 20 வது சர்வதேச டி20 அரை சதம் ஆகும். அவர் 22 பந்துகளில் அரை சதம் அடித்த நிலையில் இது அவரது இரண்டாவது அதிவேக அரை சதமாக அமைந்தது. இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தது அவரது அதிவேக அரை சதமாக இருந்தது.
அரைசதம் அடித்த அடுத்த சில பந்துகளில் பதிரானா வந்து பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டம் இழந்தார் சூர்யகுமார் யாதவ். அவர் 26 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். எட்டு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 223 ஆகும்.
இந்திய அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை பெற்றது. பயிற்சியாளர் கம்பீர் - கேப்டன் சூர்யகுமார் ஜோடி வெற்றியுடன் தங்கள் பயணத்தை துவக்கி உள்ளது.