மும்பை: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2024 டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தான் இனி இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது யாரும் எதிர்பாராத வகையில் வேறு ஒருவரை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் 2026 டி20 உலகக் கோப்பை வரை ஒரே கேப்டனின் கீழ்தான் இந்திய டி20 அணி விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், மேலும் அந்த புதிய கேப்டன் அனைத்து வீரர்களாலும் மதிக்கப்படும் ஒரு நபராகவும் இருக்க வேண்டும் என பிசிசிஐ அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் அவரால் அனைத்து டி20 தொடர்களிலும் ஆட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவை கம்பீர் கேப்டனாக பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இளம் இந்திய வீரர்கள் மத்தியில் சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவும், மரியாதையும் இருந்தது. மறுபுறம் ஹர்திக் பாண்டியா நல்ல ஆல் ரவுண்டராக இருந்தாலும், 2024 ஐபிஎல் தொடரில் கேப்டனாக தடுமாற்றத்தை சந்தித்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார் கம்பீர். எனவே, சூர்யகுமார் யாதவை 2026 டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கவுதம் கம்பீர் பிசிசிஐ-யிடம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் பிசிசிஐ உள் விவகாரங்களை அறிந்த ஊடகவியலாளர்கள் சூர்யகுமார் யாதவ் பெயரை குறிப்பிடாமல், "இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட மாட்டார். சூரியன் உதயமாகப் போகிறது" என பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு இனி இந்திய அணியில் அஸ்தமனம் ஆரம்பிக்கப் போகிறது என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அப்போது இந்திய டி20 அணியின் கேப்டன் யார் என்பது தெரிந்து விடும்.