IND vs SL: சூர்யகுமார் சோலியை முடித்த கம்பீர் - அகர்கர்.. இனி எப்போதும் ODI அணியில் வாய்ப்பு இல்லை
கொழும்பு: டி20 போட்டிகளில் உலகிலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காது என தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் சூசகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார். அதே சமயம் அவர் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதால் இனி டி20 போட்டிகளில் மட்டுமே சூர்யகுமாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிகிறது.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வென்றதை அடுத்து மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனை அடுத்து இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என நினைத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்யகுமார் யாதவ் தான் இந்திய டி20 அணியின் கேப்டன் என கூறப்படுகிறது. அதேசமயம், அவர் ஒரு நாள் அணியில் இனி எப்போதும் தேர்வு செய்யப்பட மாட்டார் எனவும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதற்கான அணித் தேர்வின் போது சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அதே சமயம், ஒரு நாள் அணியில் இடம் பெறவில்லை.
இது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், ஒரு நாள் அணியில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு நாள் அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சூர்யகுமார் யாதவ் டி20 அணியில் கவனம் செலுத்துவார் என அஜித் அகர்கர் கூறி இருக்கிறார். மேலும் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய போது எந்த போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை.
இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு அவரும் கூட ஒரு காரணம் என்ற விமர்சனம் உள்ளது. டி20 போட்டிகளில் உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் சரியாக பேட்டிங் ஆட முடியாமல் திணறுகிறார். தற்போது ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பி இருப்பதால். அவருக்கு இடம் அளிக்க வேண்டி சூர்யகுமார் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தற்போது 33 வயதாகும் நிலையில். அவர் இனி இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை.


Click it and Unblock the Notifications