IND vs SL: சாய் சுதர்சன் விலகல்.. 2 சிஎஸ்கே வீரர்கள் உள்பட 3 வீரர்கள் இடையே கடும் போட்டி
காலே: இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து, கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளார். 24 வயதான தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை பேட்டரான சாய் சுதர்சன், உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் இலங்கைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அவரது காயம் இன்னும் முழுமையாகக் குணமடையாததால் இந்தத் தொடரில் அவரால் பங்கேற்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது. சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் சாய் சுதர்சனின் இந்த விலகல் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல, அவருக்கு மாற்றாக களமிறங்கும் வீரர் யார் என்பதையும் இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும், அவருக்கான மாற்று வீரர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 3 முக்கிய வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.
1. சர்ஃபராஸ் கான்
மும்பை அணியைச் சேர்ந்த அதிரடி பேட்டர் சர்ஃபராஸ் கான், சாய் சுதர்சனுக்குப் பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்படக்கூடிய முதன்மையான வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் 2024 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளின் 11 இன்னிங்ஸ்களில் 371 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும், நவம்பர் 2024-க்குப் பிறகு அவர் இந்திய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சர்ஃபராஸ் கான், 62 போட்டிகளில் விளையாடி 64.73 என்கிற சிறப்பான சராசரியுடன் 5114 ரன்கள் குவித்துள்ளார். அத்துடன், 2026 துலீப் கோப்பைக்கான மேற்கு மண்டல அணியிலும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2. ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சனுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள மற்றொரு முக்கிய வீரர் ஆவார். ருதுராஜ் இதுவரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை என்றாலும், முதல்தர கிரிக்கெட்டில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். இதுவரை 47 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3294 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ரஜத் படிதார்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர பேட்டரான ரஜத் படிதாரும் இந்த மாற்று வீரருக்கான போட்டியில் உள்ளார். இவர் 2024-ல் இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், ஐபிஎல் 2026 தொடரில் தனது சிறப்பான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்த ரஜத் படிதார், 2026 துலீப் கோப்பையில் மத்திய மண்டல அணியை வழிநடத்தவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
" width="200" height="113">