முத்தரப்பு கிரிக்கெட் பைனல்: இலங்கை அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி.. ஸ்மிருதி மந்தனா அபார சதம்
கொழும்பு: ஐபிஎல் தொடரில் நாம் அனைவரும் பிசியாக பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணி ஆகிய மூன்று அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.
ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெற்ற இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். அந்த வகையில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த சூழலில் கொழும்பில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீராங்கனைகள் பிரித்திகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.
பிரதிகா ராவல் 49 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். ஸ்மிருதி 88 ரன்கள் எடுத்திருந்தபோது தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து அவர் சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் 92 பந்துகளில் எல்லாம் சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்மிருதி 30 ஓவர் அளவில் சதத்தை பூர்த்தி செய்ததால், இன்று அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 116 ரன்களில் ஆட்டமிழந்ததால் இதில் 15 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இதை அடுத்து ஹார்லின் டியோல் 47 ரன்களும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 41 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகியூஸ் 44 ரன்களும் எடுக்க இறுதியில் தீப்தி சர்மா 20 ரன்களும், அமஞ்சோத் சிங் 18 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா டக்அவுட் ஆகி வெளியேறினார்.
இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஸ்சி குணரத்தினே மற்றும் சாம்ரி அட்டப்பட்டு ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் விஸ்மி 36 ரன்களில் ஆட்டம் இழக்க கேப்டன் சாம்ரி அட்டப்பட்டு 51 ரன்கள் எடுத்தார். நிலாக்ஷிக்கா சில்வா 48 ரன்கள் எடுக்க ஹர்ஷிதா சமரவிக்ரமா 26 ரன்களில் வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 173 ரன்களுக்கு மூன்று விக்கெட் எடுத்து நல்ல முறையில் சேசிங் செய்து கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்கள் எல்லாம் 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய மகளிர் பந்துவீச்சு தரப்பில் சினே ரனா நான்கு விக்கெட்டுகளும் அமஞ்சோத் கவுர் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருதும், ஸ்னே ரானா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகி விருதையும் கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications