IND vs SL : தயவுசெஞ்சு செஞ்சுரி மட்டும் அடிச்சுராதீங்க.. என்ன பித்தலாட்டம்.. நொந்து போன வீரர்கள்
மும்பை: இந்திய அணியில் சதம் அடித்த வீரர்களுக்கு இடம் கிடைக்காது என ரசிகர்கள் சுட்டிக் காட்டி கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ-ஐ விளாசி வருகின்றனர். இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் சதம் அடித்த இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே இந்த விமர்சனத்திற்கு முக்கிய காரணம். அந்த இரண்டு வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா.
கடந்த நான்கு - ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார் சஞ்சு சாம்சன். அவருக்கு நீண்ட காலம் கழித்து 2024 ஜனவரியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் கிடைத்து இருந்தது. அதில் அவர் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த ஒரு நாள் தொடருக்கு அடுத்து இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இடையே ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை நடைபெற்றதால் இந்திய அணி வேறு எந்த ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் முந்தைய ஒருநாள் தொடரில் சதம் அடித்து இருந்ததால், தற்போது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தற்போது அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் கிடைக்காது.
அதே சமயம், இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், 2026 டி20 உலகக் கோப்பை வரை அவர் டி20 அணியில் இடம் பெறுவாரா? என்பதும் சந்தேகமே. எனவே, முக்கியமான தொடரான சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அவரை இடம் பெறச் செய்யக் கூடாது என்பதற்காகவே தற்போது அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில வாரங்கள் முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான அபிஷேக் சர்மா தனது இரண்டாவது சர்வதேச போட்டியிலேயே அதிரடியாக சதம் அடித்து அதிர வைத்திருந்தார். அவர் இனி டி20 அணியில் மாற்று வீரராகவாவது இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரையும் இலங்கை அணிக்கு எதிரான டி20 அணியில் இருந்து நீக்கி இருக்கிறது பிசிசிஐ. இதை அடுத்து இந்திய அணியில் சதம் அடித்த வீரர்களுக்கு இடம் கிடைக்காது. இனிமேல் சதமே அடிக்காதீர்கள் என ரசிகர்கள் தங்கள் மனக் குமுறலை கொட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications