மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கம்பீர் சூசகமாக குறிப்பிட்டார். அதன்படி அவர்கள் இருவரும் இனி தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில தொடர்களில் இருந்து விலக்கு பெற முடியாது. இனி அவர்கள் இந்திய அணி ஆடும் அனைத்து ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் முழுமையாக பங்கேற்றே ஆக வேண்டும் என்று கட்டாயம் எழுந்துள்ளது.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகும் முன்பு வரை இந்திய அணி ஆடும் சில டி20 தொடர்கள் மற்றும் ஒருநாள் தொடர்களில் விராட் கோலி பங்கேற்க மாட்டார். அதே போல, ரோஹித் சர்மா சில டி20 தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். அதற்கு காரணம் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற எளிதாக வீழ்த்தக்கூடிய அணிகளுக்கு எதிராக தாங்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என அவர்கள் கருதினர்.

இளம் வீரர்கள் கொண்ட அணியே அந்த அணிகளை வீழ்த்தி விடும் என்பதால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அந்த நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தனர். அது போலவே தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் அவர்கள் விலக்கு கேட்டு இருந்தனர்.
அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையின் முடிவில் சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டதால் இனி டி20 போட்டிகளிலும் ஆடப்போவதில்லை என்ற நிலையில், சிறிய அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் விலக்கு பெற முயன்றனர். ஆனால், அதற்கு கவுதம் கம்பீர் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். அதே சமயம், பும்ரா போன்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் அணியில் ஓய்வு அளிக்கப்படும் எனவும் கூறி இருக்கிறார்.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கம்பீர் பேசுகையில், "இந்திய அணியில் பும்ரா போன்ற முக்கிய வேகப் பந்துவீச்சாளருக்கு நாங்கள் நிச்சயம் ஓய்வு அளிப்போம். அவர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் அவர்களது உடற் தகுதியை நாங்கள் கருத்தில் கொள்வோம். பும்ரா மட்டுமல்ல, மற்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் அவர்களது பணிச்சுமைக்கு ஏற்ப ஓய்வு அளிக்கப்படும். ஆனால், பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடும் போது அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, பேட்ஸ்மேன்கள் இனி அனைத்து தொடர்களிலும் பங்கேற்பார்கள்" என்றார்.
மேலும், "ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் ஓய்வு பெற்று விட்டதால் இனி அவர்கள் இந்தியா ஆடும் அனைத்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பார்கள். விராட் மற்றும் ரோஹித்திடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் உள்ளது. அவர்கள் சர்வதேச தரத்திலான வீரர்கள். எந்த ஒரு அணியிலும் அவர்கள் இருவரையும் நாம் ஆட வைக்கலாம். அடுத்து சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆகியவை உள்ளன. அதன் பின்பு அவர்கள் உடற் தகுதியுடன் இருந்தால் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலும் பங்கேற்பார்கள்." என்றார் கவுதம் கம்பீர்.
இதன் மூலம் அவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை அணியை விட்டு நீக்கும் எண்ணத்தில் இல்லை என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார். அதே சமயம், அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இனி ஓய்வு எடுக்க முடியாது. இந்தியா ஆடும் அனைத்து தொடர்களிலும் அவர்கள் பங்கேற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.