கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி லெக் ஸ்பின்னர் ஜெஃப்ரி வான்டர்சே பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்கு முந்தைய ஒரு நாள் போட்டியில் அவர் மற்றொரு இலங்கை லெக் ஸ்பின்னரான வனிந்து அசரங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்து இருந்தார். முதல் போட்டியில் 24 ரன்களும், இரண்டாவது போட்டியில் 14 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார் கோலி.
இதை அடுத்து லெக் ஸ்பின் பந்துவீச்சை சந்திப்பதில் விராட் கோலிக்கு சிரமம் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி லெக் ஸ்பின்னுக்கு எதிராக மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். 86 ஒரு நாள் இன்னிங்க்ஸ்களில் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக 1408 ரன்கள் எடுத்திருக்கிறார். இதன் சராசரி 70 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 102.4 ஆகும்.

இதன் மூலம் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருப்பது தெரிகிறது. ஆனால், இப்போது ஏன் அவர் தடுமாறுகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி கடைசியாக 2023 உலகக் கோப்பையில் தான் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்பு சுமார் 11 மாதம் கழித்து இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் தான் சர்வதேச ஒரு நாள் போட்டியில் பங்கேற்கிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருநாள் போட்டி சூழ்நிலையில் விராட் கோலி ஆடாததாலும், அதிக லெக் ஸ்பின்னர்களை சந்திக்காமல் இருந்ததாலும் தற்போது அவருக்கு அதில் சிரமம் இருக்கலாம். இன்னும் ஏழு மாதங்களில் 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கு முன் மொத்தம் ஆறு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது.
அதில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்த இரண்டிலும் விராட் கோலி லெக் ஸ்பின்னர்களிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். மீதமுள்ள இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அவர் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்க வேண்டும். இல்லையெனில் மற்ற அணிகள் லெக் ஸ்பின்னர்களை பயன்படுத்தி கோலியை கட்டுப்படுத்துவார்கள்.