அந்த பயம் இருக்கனும்.. நெருங்கிய இந்தியா - இலங்கை தொடர்.. கேப்டன்சியை ராஜினாமா செய்த ஹசரங்கா!
கொழும்பு: இலங்கை அணியின் டி20 கேப்டன் பதவியை அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா ராஜினாமா செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் 2 வாரங்களில் நடக்கவுள்ள நிலையில், இலங்கை கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இலங்கை அணியின் பரம எதிரியான வங்கதேசம் அணியிடமே தோல்வியை சந்தித்து, குரூப் சுற்றுடன் வெளியேறியது. பின்னர் மழையும் இலங்கை அணிக்கு உதவாமல் செல்ல, 4 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றி என்று வெறும் 2 புள்ளிகள் மட்டுமே எடுத்து குரூப் டி பிரிவில் 3வது இடத்தில் நிறைவு செய்தது.

2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியால், சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை என்பதே அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா தொடங்கி, ஒவ்வொரு வீரர்களும் பொறுப்பு என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அணி வீரர்கள் சிலர் வெளிநாட்டில் இருந்து சாராய பாட்டில்களை இலங்கைக்கு வாங்கி வந்த புகைப்படங்கள் வெளியாகி கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் இலங்கை அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். இதுகுறித்து ஹசரங்கா கூறுகையில், ஒரு வீரராக இலங்கை அணிக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக நிற்பேன் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டி20 கேப்டன்சிக்கு கொண்டு வரப்பட்ட ஹசரங்கா இதுவரை இலங்கை அணியை 10 போட்டிகளில் மட்டுமே வழிநடத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. ஜூலை 26ஆம் தேதி டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஹசரங்கா கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் இலங்கை அணி புதிய கேப்டனை தேடி வருவதாக கூறப்படுகிறது. ஒருநாள் அணியை வழிநடத்தும் குசால் மெண்டிஸ் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சொந்த மண்ணில் அடையப் போகும் தோல்வியை நினைத்து பயத்தில் ஹசரங்கா கேப்டன்சியில் இருந்து விலகி இருப்பதாக இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications