மும்பை: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் இருந்து இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரில் யார் சிறந்த வீரர் என்று ரசிகர்கள் பலரும் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மாவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்திய டி20 அணியின் போஸ்டர் பாய் வீரரை உருவாக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ளது. சச்சின், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என்று வழி வழியாக போஸ்டர் பாய் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள்.

ஆனால் ஐபிஎல் தொடர் எழுச்சியால் அடுத்த போஸ்டர் பாயாக யாரை கொண்டு செல்வது என்று பிசிசிஐ குழப்பமடைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் முகமாக இருக்கும் வீரர் 3 வடிவங்களிலும் விளையாட வேண்டிய தேவை உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட தொடங்கிய பின்னரே, ரோஹித் சர்மா இந்திய அணியின் முகமாக மாறியிருந்தார்.
தற்போதைய சூழலில், பும்ரா மட்டுமே 3 வடிவங்களுக்குமான வீரராக இருக்கிறார். இதனால் பேட்ஸ்மேன் ஒருவரை முன்னிறுத்த பிசிசிஐ முடிவு செய்து, அந்த இடத்திற்கு சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக அறிவித்து கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்திய டி20 அணிக்காக சுப்மன் கில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதுவரை 19 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் இதுவரை ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 505 ரன்களை விளாசி இருக்கிறார். இவரின் பேட்டிங் சராசரி 29.7ஆக மட்டுமே உள்ள நிலையில், ஸ்ட்ரைக் 139.5 ஆக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிக டாட் பால்களை விளையாடி வருகிறார் என்ற விமர்சனமும் சுப்மன் கில் மீது உள்ளது.
மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் 20 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 633 ரன்களை விளாசி இருக்கிறார். இவரின் பேட்டிங் சராசரி 39.56ஆக உள்ள நிலையில், ஸ்ட்ரைக் ரேட்டும் 143.5ஆக உள்ளது. டாட் பால்களை சதவிகிதம் 33ஆக இருக்கும் நிலையில், ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் திறமையும் ருதுராஜிடம் அதிகம் உள்ளது.
நம்பர்கள் அடிப்படையில் கூட சுப்மன் கில்லை விடவும் ருதுராஜ் கெய்க்வாட் முன்னிலையில் இருந்தும், பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு மறுத்துள்ளது. ஆனால் டி20 கிரிக்கெட்டை முழுமையாக புரிந்து கொள்ளாத சுப்மன் கில்லால் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிச்சயம் பின் விளைவுகளை சந்திப்பார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.