IND-W vs SL-W: மரண அடி அடித்த ஷபாலி வர்மா.. 11.5 ஓவரில் இலங்கையை துவம்சம் செய்த இந்திய மகளிர் அணி
விசாகப்பட்டினம்: இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 203 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவரது அதிரடியால் 129 ரன்கள் என்ற இலக்கை, வெறும் 11.5 ஓவர்களிலேயே எட்டி இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

திணறிய இலங்கை:
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து 31 ரன்கள், ஹர்ஷிதா 33 ரன்கள் எடுத்தனர். அவர்கள் மட்டுமே ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். மற்ற வீராங்கனைகள் களத்துக்கு வந்தவுடன் வரிசையாகப் பெவிலியன் திரும்பினர்.
குறிப்பாக இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஸ்னே ராணா 4 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி கட்டுக்கோப்பாக வீசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஷபாலி வர்மாவின் 'மரண அடி':
129 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா 14 ரன்கள் மட்டுமே எடுத்து சீக்கிரம் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் இருந்த ஷபாலி வர்மா, இலங்கை பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தைச் சிதறடித்த அவர், 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்தார்.
34 பந்துகளை மட்டுமே சந்தித்த ஷபாலி வர்மா, 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என விளாசி 69 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் தன் பங்கிற்கு 15 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.
ஷபாலி வர்மாவின் இந்த அசுர வேக ஆட்டத்தால், இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து வெற்றிக்கனியைப் பறித்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 - 0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications