IND vs SL: உலகக்கோப்பை ஜெயிச்சு கொடுத்தவருக்கே டீமில் இடமில்லை.. கொந்தளித்த முன்னாள் வீரர்
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் உலகக் கோப்பை வென்று கொடுத்த சுழற் பந்துவீச்சாளருக்கு இடம் அளிக்கவில்லை என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் குல்தீப் யாதவ் சூப்பர் 8 சுற்று மற்றும் நாக் அவுட் போட்டிகளில் முக்கிய பங்காற்றினார்.
இந்திய அணி உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடியது. குல்தீப் யாதவ் அதில் குரூப் சுற்றில் இடம் பெறவில்லை. மற்ற 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அந்த ஐந்து போட்டிகளில் அவர் 10 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் அவரை இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஏன் சேர்க்கவில்லை? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர்களாக ரவி பிஷ்னோய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை அணியில் இடம் பெற்ற அக்சர் பட்டேலுக்கு டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், "இந்திய டி20 அணியில் குல்தீப் யாதவ் இடம் பெறாதது அதிக ஆச்சரியத்தை அளிக்கிறது. அவர் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் ஒரு நாள் அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால், ஏன் டி20 அணியில் இடம் பெறவில்லை என்று எனக்கு புரியவில்லை." என்றார்.
மேலும், ஒருநாள் அணியில் சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஏன் இடம் பெறவில்லை? என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். "சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இல்லை. ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால், அவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கு என்னதான் நடக்கிறது?" என ஆகாஷ் சோப்ரா அணித் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications