ஐசிசி தரவரிசை.. உச்சத்தில் ஜெய்ஸ்வால்.. சுப்மன் கில்லால் சரிந்த ருதுராஜ்.. யாருக்கு எந்த இடம்?
மும்பை: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சதம் உட்பட 141 ரன்களை விளாசினார். அதேபோல் 3 இன்னிங்ஸில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 133 ரன்களை விளாசினார். இதன் மூலமாக இந்திய அணியின் 3 பேட்ஸ்மேன்கள் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10 பட்டியலுக்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் 797 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோல் ஜிம்பாப்வே டி20 தொடரில் ஜஸ்ட் மிஸ்ஸில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த ஜெய்ஸ்வால் 4 இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல் 7வது இடத்தில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட், சில போட்டிகளில் விளையாட தவறியதால் 684 புள்ளிகளுடன் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடி சுப்மன் கில் 170 ரன்களை விளாசினார். இதன் காரணமாக 36 இடங்கள் முன்னேறி 37வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் டி20 தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் மூலமாக இருவரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் கிட்டத்தட்ட இடத்தை உறுதி செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இந்திய அணியின் தொடக்க வீரருக்கான ரேஸில் சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோரும் உள்ளனர். இதனால் இலங்கை டி20 தொடரில் யாருக்கு யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடக்க வீரராக மட்டுமல்லாமல் மிடில் ஆர்டரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுவதால், இலங்கை தொடரில் அவரின் ரோல் முடிவு செய்யபப்டும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications