Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2026: கேப்டனாக சூர்யகுமார் மாஸ் சாதனை.. பாபர் அசாம் ரெக்கார்டை முறியடித்தார்

மும்பை: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் 84 ரன்கள் குவித்து ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியாவின் பயணத்தை சூர்யகுமார் யாதவ் தனது பேட்டிங்கால் அதிரடியாக தொடங்கினார்.

அதுவும் அணி நெருக்கடியில் இருந்த போது, 49 பந்துகளில் விளாசிய 84 ரன்களில் 10 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். இப்போட்டியில் அவர் ஆடியது, உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணி தடுமாறியது. அபிஷேக் ஷர்மா இரண்டாவது ஓவரிலேயே அலி கான் பந்தில் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய பேட்டிங் வரிசையில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். ஆனால், ஷாட்லி வான் ஷால்க்விக், இஷான், திலக் மற்றும் சிவம் தூபே ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி, இந்திய அணியின் சரிவுக்குக் காரணமானார்.

ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, 13 ஓவர்களின் முடிவில் இந்தியா 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. வான் ஷால்க்விக் 2 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடினார்.

மைதானத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு, பவர் ஹிட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து ஆடிய சூர்யகுமார், சிறப்பான ஷாட் தேர்வுகளுடன் தனது இன்னிங்ஸைச் செதுக்கினார். இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய அவர், கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்களையும், இறுதி ஓவரில் மட்டும் 21 ரன்களையும் குவித்தார். அவரது ஆட்டமிழக்காத 84 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது.

இந்த சவாலான ஸ்கோரை இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தற்காத்தனர். அமெரிக்க அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அணிக்கு வெற்றியைப் பரிசளித்தனர். இந்த வெற்றி, குறிப்பாக ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்து அணியை மீட்டதால், சூர்யகுமார் யாதவுக்கு வரும் போட்டிகளுக்கான மிகப்பெரிய நம்பிக்கையைத் தரும்.

டி20 உலகக் கோப்பை கேப்டன்சி அறிமுக போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2009-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராககிறிஸ் கெயில் 88 ரன்களுடன் முதலிடத்திலும் , தற்போது சூர்யகுமார் யாதவ் 84 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார். பாபர் அசாம் 2021-ல் இந்தியாவுக்கு எதிராக எடுத்த 68 ரன்கள் சாதனையை, சூர்யகுமார் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் டி20 உலககோப்பையில் சூர்யகுமார் 500 ரன்களை கடந்துள்ளார். இந்த நிலையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியை வரும் வியாழன் அன்று நமீபியாவை எதிர்கொள்கிறது.

Story first published: Sunday, February 8, 2026, 6:20 [IST]
Other articles published on Feb 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+