மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவிடம் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது, தனி ஒருவனாகப் போராடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடைசி இரண்டு ஓவர்களில் ஆடிய அதிரடி அட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதுவரை ஆதிக்கம் செலுத்தியதாக நினைத்துக் கொண்டு இருந்த அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சூர்யகுமார் யாதவ்.
முதலில் பேட் செய்த இந்திய அணி, அமெரிக்காவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிச் விக்கெட்களை இழந்தது. அபிஷேக் சர்மா, சிவம் துபே டக்-அவுட் ஆக, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் வெளியேறினர். 12.4 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, 120 ரன்களைத் தாண்டுமா என்ற பரிதாப நிலையில் இந்தியா இருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்றார் கேப்டன் சூர்யகுமார். கடைசி இரண்டு ஓவர்களில் ஆட்டத்தைக் கையில் எடுத்தார்.
வான் ஷால்க்விக் வீசிய 19வது ஓவரில், சூர்யகுமார் ஒரு அற்புதமான சிக்ஸரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் பறக்கவிட்டார். அந்த ஷாட்டின் அழகைப் பார்த்து அமெரிக்க வீரர்களே கைதட்டிப் பாராட்டினர். அதே ஓவரில் ஒரு பந்தில் சிங்கிள் ஓட வாய்ப்பிருந்தும், மறுமுனையில் இருந்த அர்ஷ்தீப் சிங்கைத் தடுத்து நிறுத்தி, 'ஸ்ட்ரைக் என்னிடமே இருக்கட்டும்' என சைகை செய்தார். ஒரு கேப்டனாக அவர் எடுத்த அந்த முடிவுதான் ஆட்டத்தின் திருப்புமுனை. அந்த ஓவரில் மட்டும் 12 ரன்கள் கிடைத்தன.
கடைசி ஓவரை வீச வந்த சவுரப் நேத்ரவல்கர், அதுவரை சிறப்பாகப் பந்துவீசியிருந்தார். ஆனால், சூர்யகுமார் யாதவின் அதிரடிக்கு முன்பு அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளிலேயே இரண்டு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்து மொத்தம் 20 ரன்களை விளாசி அமெரிக்க வீரர்களை உறைந்து போக வைத்தார். கடைசி பந்தில் இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது வருண் சக்கரவர்த்தி ரன்-அவுட் ஆனார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 21 ரன்கள் கிடைத்தன.
120 ரன்களை எட்டுமா என்ற நிலையில் இருந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் மட்டும் களத்தில் நின்று ஆடவில்லை என்றால், இந்திய அணியின் கதை 120 ரன்களுக்குள் முடிந்திருக்கும். ஆனால், ஒரு கேப்டனாக, தனி ஒருவனாகப் போராடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து, 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை 161 என்ற கௌரவமான நிலைக்குக் கொண்டு சென்றார்.