நியூயார்க்: இந்திய அணியை வீழ்த்துவோம் என வாய் சவடால் விட்டு வந்த அமெரிக்க அணிக்கு முதல் பந்திலேயே பதிலடி கொடுத்தது இந்திய அணி.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய 2024 டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவு போட்டியில் முதல் ஓவரிலேயே இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். அவர் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அமெரிக்க அணியை அரண்டு போக வைத்தார். இந்த போட்டிக்கு முன் அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தாங்கள் இந்திய அணியை வீழ்த்த ஆர்வமாக இருப்பதாக கூறி இருந்தார். முன்னதாக அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான அணிகளை வீழ்த்தி இருந்ததால் இந்திய அணியையும் வீழ்த்தலாம் என கனவு கண்டு கொண்டு இருந்தது அமெரிக்க அணி.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து திணறியது அமெரிக்கா. அது மட்டுமின்றி முதல் ஓவரிலேயே இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது அமெரிக்கா. அர்ஷ்தீப் சிங் தனது முதல் ஓவரின் முதல் பந்தில் சயான் ஜஹாங்கீர் விக்கெட்டையும், ஆறாவது பந்தில் முக்கிய வீரரான ஆண்ட்ரியாஸ் கவுஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
அதன்பின் சிராஜ் மற்றும் பும்ரா இணைந்து பவர் பிளே ஓவர்களில் அமெரிக்க அணியை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினர். முதல் ஆறு ஓவர்களில் அமெரிக்க அணி 18 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட் இழந்து இருந்தது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் அமெரிக்கா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்து எட்டாவது ஓவரில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தினார். இதை அடுத்து அமெரிக்க அணி தடுமாறத் தொடங்கியது. இந்திய அணியையும் பாகிஸ்தான் போல நினைத்த அமெரிக்க அணிக்கு இந்திய அணி கடும் பதிலடி கொடுத்தது.