51 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக இப்படி நடந்ததே இல்லை.. சரித்திரம் படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஜோடி
டெல்லி: கடந்த 51 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக செய்ய முடியாத சாதனை ஒன்றை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் - ஜான் கேம்ப்பெல் ஜோடி. டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில், இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சதம் அடித்து, டெல்லி டெஸ்ட்டில் புதிய வரலாற்றை நிகழ்த்தி உள்ளனர்.
51 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில், ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சதம் அடித்து உள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 518 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்து டிக்ளேர் செய்து இருந்தது. அதற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்குச் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.
270 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்றது. இனி போட்டியின் முடிவு ஒரு சம்பிரதாயம் தான். எப்படியும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் விடாப்பிடியாக நின்று ஆடியது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல் - ஷாய் ஹோப் ஜோடி.
கேம்ப்பெல் மற்றும் ஹோப்பின் வரலாற்றுச் சதங்கள்
தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் மற்றும் நான்காம் நிலை வீரர் ஷாய் ஹோப் ஆகியோர், இந்தியப் பந்துவீச்சுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர். ஜான் கேம்ப்பெல், 199 பந்துகளைச் சந்தித்து, 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் குவித்தார். மறுமுனையில், தனது நீண்ட கால ரன் வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாய் ஹோப், 214 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

51 ஆண்டு கால சாதனையைத் தகர்த்த ஜோடி
இந்த சதங்களின் மூலம், இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சதம் அடித்த அரிய சாதனை நிகழ்ந்தது. 51 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்த சாதனை அரங்கேறி உள்ளது.
இதற்கு முன்பு, 1974 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஜாம்பவான்களான கார்டன் கிரீனிட்ஜ் (107) மற்றும் கிளைவ் லாயிட் (163) ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தனர். தற்போது, கேம்ப்பெல் மற்றும் ஹோப் ஜோடி அந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி, தங்களது பெயர்களைச் சரித்திரத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்திய மண்ணில், ஒரு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சதம் அடித்த நிகழ்வுகள்:
- எவர்டன் வீக்ஸ் (101), கிளைட் வால்காட் (108) - கொல்கத்தா, 1948-49
- கார்டன் கிரீனிட்ஜ் (107), கிளைவ் லாயிட் (163) - பெங்களூரு, 1974
- ஜான் கேம்ப்பெல் (115), ஷாய் ஹோப் (103) - டெல்லி, 2025
கேம்ப்பெல் - ஹோப் ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இறுதியில், கேம்ப்பெல் ஜடேஜாவின் பந்துவீச்சிலும், ஹோப் முகமது சிராஜின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஹோப்பின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், முகமது சிராஜ் 2025-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (37) வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு 121 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.


Click it and Unblock the Notifications