டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெல்லி டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது ஆனாலும், கேப்டன் சுப்மன் கில் எடுத்த ஒரு முடிவு, தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல; அந்த வெற்றியை எப்படிப் பெறுகிறோம் என்பதும் ஒரு கேப்டனின் திறமையை எடைபோடும். அந்த வகையில் "இந்தியா ஜெயித்தாலும், கேப்டன் சுப்மன் கில் எடுத்த ஃபாலோ ஆன் முடிவு தவறுதான்" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதற்கு பின் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணிக்கு 270 ரன்கள் என்ற இமாலய முன்னிலை கிடைத்தது.
இந்தச் சூழலில், கேப்டன் சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குச் சிறிதும் யோசிக்காமல், ஃபாலோ-ஆன் கொடுத்தார். நான்காம் நாள் ஆட்டத்தின்போது, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களான ஜான் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் வரலாற்றுச் சதம் அடித்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்ததால், கில்லின் இந்த முடிவு தவறு என்பது தெரிந்தது.
இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில், ஃபாலோ-ஆன் கொடுத்த பிறகு மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. கடைசியாக 2012-ல் அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்த நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில்லின் இந்த முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன:
பந்துவீச்சாளர்களின் சோர்வு: முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் (5 விக்கெட்) மற்றும் ரவீந்திர ஜடேஜா (3 விக்கெட்) ஆகியோர் இணைந்து சுமார் 46 ஓவர்கள் வீசி, சோர்வடைந்திருந்தனர். அவர்களுக்கு ஓய்வு கொடுக்காமல், உடனடியாக மீண்டும் பந்துவீச அழைத்தது பெரும் தவறு. இதன் விளைவாக, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கத் திணறினர்.
ஆடுகளத்தைக் கணிக்கத் தவறியது: முதல் இன்னிங்ஸின் இறுதியிலேயே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீழ் வரிசை வீரர்கள் கணிசமான ரன்களைச் சேர்த்துப் போராடினர். கடைசி 2 விக்கெட்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்களை சேர்த்தது. அப்போதே, ஆடுகளம் பந்துவீச்சுக்கு எதிர்பார்த்த அளவு ஒத்துழைக்கவில்லை என்பதை சுப்மன் கில் உணர்ந்திருக்க வேண்டும்.
சரியான மாற்று வியூகம்: 270 ரன்கள் முன்னிலை இருந்த நிலையில், இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்து, ஒரு 150 ரன்களை வேகமாகச் சேர்த்து, சுமார் 420+ ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கலாம். இது, பந்துவீச்சாளர்களுக்குத் தேவையான ஓய்வைக் கொடுத்திருப்பதோடு, நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் ஆடுகளத்தில் அவர்களைப் புத்துணர்ச்சியுடன் பந்துவீசவும் வைத்திருக்கும்.
போட்டி சூழ்நிலை, பிட்ச்சின் தன்மை, தனது அணியின் பந்துவீச்சாளர்களின் நிலை ஆகியவற்றை சுப்மன் கில் சரியாக ஊகிக்கவில்லை என்பதையே ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், சுப்மன் கில்லுக்கு கேப்டனாக இது ஏழாவது டெஸ்ட் போட்டி மட்டுமே. அவர் இந்த தவறில் இருந்து கற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.