டெல்லி: விராட் கோலியின் சொந்த ஊரான டெல்லியில் எப்போதும் 'கோலி, கோலி' என்ற கோஷம் தான் விண்ணைப் பிளக்கும். ஆனால், அதே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், அந்த கோஷத்தையே நிறுத்தி, 'ஜெய்ஸ்வால், ஜெய்ஸ்வால்' என்று ஒட்டுமொத்த மைதானத்தையும் தன் பெயர் சொல்ல வைத்திருக்கிறார் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், தனது சதத்தால் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார் ஜெய்ஸ்வால். இந்தப் போட்டி டெல்லியில் நடந்த நிலையில் அங்கிருந்த ரசிகர்களை ஈர்த்தார் ஜெய்ஸ்வால்.

விராட் கோலியின் பெயர் மட்டுமே அதிக அளவில் உச்சரிக்கப்படும் டெல்லி மைதானத்தில், வெள்ளிக்கிழமை அன்று ஜெய்ஸ்வால் பெயர் விண்ணை முட்டும் அளவுக்கு கோஷமிடப்பட்டது. விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், அடுத்த தலைமுறையில் யார் ரசிகர்களை ஈர்ப்பார்கள்? என்ற கேள்வி இருந்தது, அதற்கான விடையாகவும் இந்த சம்பவம் அமைந்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாவது நாள் அன்று அவர் இரட்டை சதம் அடிப்பார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜெய்ஸ்வால் 175 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம், விராட் கோலியின் அரிய டெஸ்ட் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார். இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இரண்டு முறை 150-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவிப்பதே அந்தச் சாதனையாகும். கோலி எந்த மைதானங்களில் (விசாகப்பட்டினம், டெல்லி) இந்தச் சாதனையைச் செய்தாரோ, அதே மைதானங்களில் ஜெய்ஸ்வாலும் செய்திருப்பது இந்தச் சாதனையின் மற்றொரு சிறப்பாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெறும் இரண்டு ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்துள்ள ஜெய்ஸ்வால், தனது 26-வது டெஸ்ட் போட்டியிலேயே 7-வது சதத்தை விளாசியுள்ளார். இதில் இரண்டு இரட்டைச் சதங்களும் அடங்கும்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தனது நிதானத்தையும், ஆக்ரோஷத்தையும் ஒருசேர வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், முதலில் கே.எல். ராகுலுடன் (38 ரன்கள்) இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பின்னர், சாய் சுதர்சனுடன் கைகோர்த்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் என்ற பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் உத்வேகத்தை முழுமையாகச் சிதைத்தார். தனது சதத்தை எட்டியதும், கைகளால் இதய வடிவம் காட்டியும், ரசிகர்களை நோக்கி முத்தங்களைப் பறக்கவிட்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில், அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பு அளித்த சாய் சுதர்சன், தனது முதல் டெஸ்ட் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக 87 ரன்களில் ஜோமல் வாரிக்கன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.