IND vs WI: இவர் ஆடிய 7 மேட்ச்சிலும் இந்தியாவுக்கு வெற்றி.. வரலாறு படைத்த துருவ் ஜுரல்.. என்ன சாதனை?
டெல்லி: இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் களமிறங்கிய எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததே இல்லை. ஆம், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் துருவ் ஜுரல், தனது கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்திலேயே இந்த நம்பமுடியாத வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சரித்திர சாதனையை அவர் படைத்துள்ளார்.
டெல்லியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், துருவ் ஜுரல் இந்த மகத்தான மைல்கல்லை எட்டினார்.
இதற்கு முன்பு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தனது முதல் ஆறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தச் சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார். 2013-ல் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய புவனேஷ்வர் குமாரின் 12 ஆண்டு கால சாதனையை, 24 வயதான துருவ் ஜுரல் தற்போது முறியடித்துள்ளார்.

துருவ் ஜுரலின் 7 டெஸ்ட் போட்டிகள்
துருவ் ஜுரலின் இந்த சாதனைப் பயணம் உள்ளூர் டெஸ்ட் மற்றும் வெளிநாடு டெஸ்ட் என அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அமைந்தது. அவர் இந்திய அணிக்காக ஆடிய 7 போட்டிகளின் சுருக்கத்தைக் கீழே காணலாம்:
- இங்கிலாந்துக்கு எதிராக (ராஜ்கோட், 2024): துருவ் ஜுரலின் அறிமுகப் போட்டியிலேயே, இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
- இங்கிலாந்துக்கு எதிராக (ராஞ்சி, 2024): தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரல் 90 மற்றும் 39* ரன்கள் குவித்து, அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
- இங்கிலாந்துக்கு எதிராக (தர்மசாலா, 2024): துருவ் ஜுரலின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (பெர்த், 2024): துருவ் ஜுரலின் நான்காவது போட்டியில் கடினமான ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இங்கிலாந்துக்கு எதிராக (ஓவல், 2025): துருவ் ஜுரலின் ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து மண்ணில், 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக (அகமதாபாத், 2025): துருவ் ஜுரலின் ஆறாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 125 ரன்கள் குவித்து அசத்தினார் துருவ் ஜுரல்.
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக (டெல்லி, 2025): துருவ் ஜுரலின் ஏழாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துருவ் ஜுரல் இந்திய அணியில் இருந்ததால் மட்டுமே இந்த வெற்றிகள் கிடைக்கவில்லை. ஒரு விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் அளித்த பங்களிப்பு மிகவும் அதிகம். குறிப்பாக, ராஞ்சியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்த 90 ரன்கள், அந்தப் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அவர் அடித்த சதம் அடித்து 125 ரன்கள் குவித்தார், இது அவரது பேட்டிங் திறமைக்குச் சான்றாகும்.
அடுத்த கட்டத்தை நோக்கி...
இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பரிசாக, துருவ் ஜுரலுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், மாற்று விக்கெட் கீப்பராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இந்தியாவிற்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகாத நிலையில், துருவ் ஜுரலின் டெஸ்ட் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அணி நிர்வாகம் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. தனது கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்திலேயே ஒரு அசைக்க முடியாத சாதனையைப் படைத்துள்ள துருவ் ஜுரல், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications