IND vs WI: "சோம்பேறி ஷாட்".. சாய் சுதர்சனுக்கு சாபம்விட்ட தினேஷ் கார்த்திக்.. செஞ்சுரி போச்சு
டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அபாரமாக பேட்டிங் செய்து அரைசதம் கடந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் அவர் சதம் அடிக்க மாட்டார் என கூறிய வார்த்தைகள் சில மணி நேரங்களிலேயே நிஜமாகிப் போனது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை நோக்கி சீராக முன்னேறிக் கொண்டிருந்த இளம் வீரர் சாய் சுதர்சன், கவனக்குறைவால் ஆட்டமிழந்த விதம், தினேஷ் கார்த்திக்கின் பேச்சை உண்மையாக்கியுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். ஜெய்ஸ்வால் தனது 7-வது டெஸ்ட் சதத்தை விளாச, மறுமுனையில் சாய் சுதர்சன் தனது இரண்டாவது டெஸ்ட் அரைசதத்தைக் கடந்து நம்பிக்கையுடன் விளையாடினார்.

'சோம்பேறி' ஷாட்
ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருந்த நிலையில், 106 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது, சாய் சுதர்சன் ஒரு தேவையற்ற ஷாட்டை ஆடினார். பந்தை சாதாரணமாகத் தட்டிவிட்டு (lazy flick shot) சிங்கிள் எடுக்க முயன்றார். ஆனால், பந்து காற்றில் எழும்பி, பந்துவீச்சாளர் ஜோமல் வாரிக்கன் கைகளுக்குச் சென்றது. அதிர்ஷ்டவசமாக, வாரிக்கன் பந்தைப் பிடித்த வேகத்தில் தரையில் விழுந்தபோது, அது அவரது கைகளிலிருந்து நழுவியது.
சாய் சுதர்சன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், வர்ணனை செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் கடும் கோபமடைந்தார். அவர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்தார்: "சாய் சுதர்சனிடம் இருந்து இது ஒரு மிகச் சோம்பேறித்தனமான ஷாட். அவர் இன்னும் வலுவான ஒரு ஷாட்டை முயற்சித்திருக்க வேண்டும். இதைத் தட்டிவிட்டு ஒரு சிங்கிள் எடுக்க அவர் முயன்றிருக்கிறார். அவர் அந்த ஷாட்டை ஆடிய விதம், அவர் இன்னும் கடுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது." என்று கார்த்திக் பொரிந்து தள்ளினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர் இன்று சதம் அடிக்காமல் போவதற்கு ஒரேயொரு காரணம் மட்டும்தான் இருக்க முடியும், அது அவராகத்தான் இருக்க முடியும். இன்று அவருக்கு எதிராக அற்புதமாகப் பந்துவீசப்படும் என்று நான் நினைக்கவில்லை. அவர் செய்ய வேண்டியதெல்லாம், தன் மனதைக் கட்டுப்படுத்தி, கவனம் சிதறாமல் ஆடுவதுதான்." என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்.
கடைசியில் பலித்த தீர்க்கதரிசனம்
தினேஷ் கார்த்திக் கணித்தது போலவே நடந்தது. கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த சாய் சுதர்சன், தொடர்ந்து சிறப்பாக ஆடி 80 ரன்களைக் கடந்தார். தனது முதல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், மீண்டும் அதே பந்துவீச்சாளர் ஜோமல் வாரிக்கன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தார்.
வாரிக்கன் வீசிய பந்து கூர்மையாகத் திரும்பி சுதர்சனின் பேடில் தாக்க, நடுவர் உடனடியாக அவுட் கொடுத்தார். நம்பிக்கையில்லாமல் சுதர்சன் டி.ஆர்.எஸ் (DRS) முறையீடு செய்தும், அது இந்தியாவின் ஒரு ரிவ்யூவை வீணடித்ததே தவிர, முடிவை மாற்றவில்லை. 13 ரன்களில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நழுவவிட்டு, 87 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஒரு சிறு கவனக்குறைவு காரணமாக சாய் சுதர்சன் தனது முதல் சதத்தை தவறவிட்டார். தினேஷ் கார்த்திக்கின் வார்த்தைகளும் உண்மையானது.


Click it and Unblock the Notifications