டெல்லி: இரட்டை சதத்தை நோக்கி ஆடிக் கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அற்புதமான இன்னிங்ஸ், கேப்டன் சுப்மன் கில்லுடனான ஒரு மோசமான ரன் அவுட்டால் முடிவுக்கு வந்தது. இந்தச் சம்பவம், மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் கேப்டன் கில் மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பின்னர் சுப்மன் கில் சதம் அடித்த போதும் அவர் மீதான விமர்சனம் குறையவில்லை.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 173 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால், இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரட்டை சதத்தைப் பதிவு செய்வார் என்று ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் வீசிய பந்தை, ஜெய்ஸ்வால் மிட்-ஆஃப் திசையில் மெதுவாகத் தட்டிவிட்டு, ஒரு விரைவான சிங்கிள் எடுக்க ஓடினார். அது 'ஸ்ட்ரைக்கர்' முனையில் இருந்த ஜெய்ஸ்வாலின் அழைப்பு. ஆனால், நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த கேப்டன் சுப்மன் கில், ரன் ஓடத் தயக்கம் காட்டினார்.
ஆனால், ஜெய்ஸ்வாலோ, ரன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதி தூரம் ஓடிவந்திருந்தார். கில்லின் தயக்கத்தைக் கண்டு அவர் திரும்புவதற்குள், ஃபீல்டர் டேகனரைன் சந்தர்பால் பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீச, அவர் ஸ்டம்பைத் தகர்த்தார். வெறும் 2 ரன்கள் மட்டுமே தனது நேற்றைய ஸ்கோருடன் சேர்த்து, 175 ரன்களில் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார்.

ரன் அவுட் ஆனதும், ஜெய்ஸ்வாலின் கோபம் எரிமலையாக வெடித்தது. பெவிலியன் திரும்ப மறுத்த அவர், களத்திலேயே நின்று சுப்மன் கில்லுக்கு ஒரு மரணப் பார்வையை வீசினார். மேலும், "அது என் கால், நீ ஓடி வந்திருக்க வேண்டும்" என்பதைப் போல இரண்டு முறை சைகையால் சுட்டிக்காட்டி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். பின்னர் அம்பயர் அருகே வந்து, ஜெய்ஸ்வாலை வெளியேறுமாறு கூறினார். ஒரு இரட்டை சதத்தை மிக அருகில் தவறவிட்ட ஏமாற்றத்துடன், ஜெய்ஸ்வால் கனத்த இதயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்த ரன் அவுட்டிற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் கேப்டன் சுப்மன் கில் மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். "ஒரு செட்டில் ஆன பேட்ஸ்மேன், அதுவும் இரட்டை சதத்திற்கு அருகில் இருக்கும்போது, அவரது அழைப்பிற்கு மதிப்பளித்திருக்க வேண்டும். கில்லின் சுயநலமான தயக்கத்தால் ஒரு இளம் வீரரின் சாதனை பறிபோய்விட்டது. கேப்டனாக இருந்து கொண்டு இப்படி ஒரு தவறான புரிதலுக்கு வழிவகுத்தது தவறு." எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் பொதுவாக 'ஸ்ட்ரைக்கரின் கால்'க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில், கில்லின் தயக்கம் ஒரு பெரிய தவறு என்று பல கிரிக்கெட் விமர்சகர்களும் கருதுகின்றனர். பின்னர் இந்தப் போட்டியில் சுப்மன் கில் சதம் அடித்தார். இந்திய அணி 518 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.