Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: சஞ்சு சாம்சன் சாதித்தவுடன் குஷியான கம்பீர்.. 6 போட்டிகளுக்கு பின் பிரஸ்மீட்டில் பேச்சு

கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தோல்வியடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான நிலையில், 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணி வெற்றிகரமாகத் துரத்தி அசத்தியது.

இந்த வெற்றிக்கு முழு முதல் காரணமாக அமைந்தது தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டமே ஆகும். போட்டி முடிந்த உடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த ஆறு போட்டிகளாக அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சு சாம்சன் தனி ஆளாக வெற்றி தேடித் தந்த நிலையில், கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

IND vs WI Gautam Gambhir Praises Sanju Samson s Heroics I Don t Believe in Data Only Instincts

சஞ்சு சாம்சனின் பொறுப்பான ஆட்டம்

196 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 97 ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். எந்த இடத்திலும் பதற்றப்படாமல் மிகத் தெளிவாக அவர் விளையாடிய விதம் அனைவரையும் ஈர்த்தது. டி20 உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

சாம்சனின் இந்த ஆட்டம் குறித்துப் பேசிய கவுதம் கம்பீர், "சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் பந்தை வலுக்கட்டாயமாக அடிக்க முயற்சிக்கவில்லை. அவர் மிகவும் இயல்பான கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே விளையாடினார். அவரிடம் அதற்கான திறமை இருக்கிறது. பயிற்சியின் போது அவர் மிகவும் நேர்த்தியாகப் பந்தை எதிர்கொண்டார். அதனை அப்படியே ஆடுகளத்தில் அவர் செயல்படுத்திய விதம் அருமை. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். இனி வரும் போட்டிகளிலும் அவர் இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

மேலும், "சாம்சன் நியூசிலாந்து தொடரில் சற்று சறுக்கினார். சில நேரங்களில் வீரர்களை அந்த அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வர அவர்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். உலகக் கோப்பையில் தேவைப்படும் நேரத்தில் அவர் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார் என்று எங்களுக்குத் தெரியும். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அதையே செய்துள்ளார். இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் என இரண்டு சிறந்த விக்கெட் கீப்பர்கள் நமக்குக் கிடைத்துள்ளனர்" என்று கம்பீர் தெரிவித்தார்.

நான் தரவுகளை நம்புவதில்லை

தற்கால கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் லேப்டாப் மற்றும் தரவுகளை வைத்துக்கொண்டு திட்டங்களைத் தீட்டும் நிலையில், தான் தரவுகளை நம்புவதில்லை என்று கம்பீர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய அவர், "நான் தரவுகளை நம்புவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் தரவுகள் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. டி20 கிரிக்கெட் என்பது முழுவதும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. நான் எனது உள்ளுணர்வை மட்டுமே நம்புகிறேன். எனக்கு கிரிக்கெட் பற்றித் தெரிந்த விஷயங்களைக் கேப்டனுக்கு ஆலோசனையாக வழங்குவேன். ஆனால், களத்தில் இறுதி முடிவை எடுப்பது கேப்டன் தான்" என்று கூறினார்.

பும்ரா ஒரு மிக முக்கிய ஆயுதம்

தரவுகளை நம்பவில்லை என்றால் பும்ராவை எப்படிச் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு கம்பீர் பதிலளித்தார். "அது எதிரணியின் பலத்தைப் பொறுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிடில் ஆர்டரில் ஹெட்மையர், ரோஸ்டன் சேஸ் என அதிரடி வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆட்டத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க எங்களுக்கு பும்ரா தேவைப்பட்டார். அதனால்தான் அவரை அந்த நேரத்தில் பந்துவீச அழைத்தோம். பும்ரா எங்களின் மிக முக்கிய ஆயுதம். அவரைப் பல்வேறு விதங்களில் நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம்" என்றார்.

சிறு பங்களிப்பும் முக்கியம்

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் கம்பீர் கூறிய ஒரு விஷயம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கம்பீர் 97 ரன்கள் எடுத்திருந்தாலும், தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸர் மட்டுமே பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவர் பேசினார்.

சிவம் துபே அடித்த 8 ரன்கள் குறித்துப் பேசிய கம்பீர், "இந்த அணியில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் நீங்கள் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், பல ஆண்டுகளாக நாம் ஒரு சிலரின் குறிப்பிட்ட பங்களிப்பை மட்டுமே அதிகம் பேசி வருகிறோம். இது ஒரு அணி விளையாட்டு. பெரிய ரன்கள் அடிப்பது மட்டும்தான் தலைப்புச் செய்தியாக மாறப்படுகிறது. ஆனால் வெற்றி பெறுவதற்குக் கைகொடுக்கும் சிறிய பங்களிப்புகளும் மிகவும் முக்கியம். என்னைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு இணையானது சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள். நான் பயிற்சியாளராக இருக்கும் வரை இதுதான் அணியின் தத்துவமாக இருக்கும்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய வெற்றியின் உத்வேகத்துடன், இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் மிகவும் தெளிவான சிந்தனை கொண்ட பயிற்சியாளருடன் இந்திய அணி அரையிறுதிக்குத் தயாராகியுள்ளது.

Story first published: Monday, March 2, 2026, 7:58 [IST]
Other articles published on Mar 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+