IND vs WI: வெற்றியின் அருகே வந்த இந்தியா.. பிரையன் லாராவின் பேச்சை கேட்ட ஜெய்ஸ்வால்.. 5வது நாள் வந்த டெஸ்ட்
டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்துவிட்டது. டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்திருந்தது.
இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்களும், கேப்டன் கில் 129 ரன்களும் குவித்திருந்தனர். இதனை அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 248 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ், ஐந்து விக்கெட்டுகளையும், ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இதனை அடுத்து ஃபாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பேட்டிங் அபாரமாக இருந்தது.
குறிப்பாக தொடக்க வீரர் ஜான் கேம்பேல் 115 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று சாய் ஹோப் 103 ரன்களும், கேப்டன் ராஸ்டன் சேஸ் 40 ரன்களும், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டம் இழக்காமல் 50 ரன்களும் எடுத்திருந்தனர். இறுதியில் ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 118.5 ஓவர்களை எதிர்கொண்டு 390 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இரண்டாவது இன்னிங்சில் குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதனை அடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வாலை கட்டி அணைத்து பேசிய பிறகு பிரையன் லாரா, எங்கள் அணியின் பௌலர்களை அடிக்காதே என்று கிண்டல் அடித்தார்.
இந்த நிலையில் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 8 ரன்களில் ஆட்டம் இழக்க லாராவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அவர் ஆட்டமிழந்து விட்டார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 47 பந்துகள் எதிர்கொண்டு 30 ரன்கள் உடனும், ராகுல் 54 பந்துகளை எதிர் கொண்டு 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்தியாவின் வெற்றிக்கு வெறும் 51 ரன்கள் தான் தேவைப்படுகிறது. ஐந்தாவது நாள் முழுவதும் எஞ்சி இருக்கிறது. இதனால் ஐந்தாவது நாள் காலையிலேயே இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications