அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தியுள்ளார். சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்கு பின் கேஎல் ராகுல் சதம் விளாசி இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது.

இதன்பின் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் நிதானமாக முன்னேறியது. 109 பந்துகளுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 94 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஆனால் ராஸ்டன் சேஸ் பந்தில் தேவையின்றி ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன்பின் துருவ் ஜுரெல் களம் புகந்தார். ஆனால் ஆட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் கேஎல் ராகுல் வைத்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் பந்துகளை எளிதாக கையாண்ட கேஎல் ராகுல், பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். அவர் 90 ரன்களை கடந்த போது, சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் கேஎல் ராகுல் கொஞ்சம் கூட அவசரம் காட்டவில்லை.
நிதானமாக ஒவ்வொரு ரன்னாக எடுத்த கேஎல் ராகுல், 190 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் அடிக்கும் 11வது சதம் இதுவாகும். ஆனால் சொந்த மண்ணில் கேஎல் ராகுல் அடிக்கும் 2வது சதம் இது. 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக சொந்த மண்ணில் கேஎல் ராகுல் சதம் அடித்திருந்தார்.
அதன்பின் கடந்த 9 ஆண்டுகளில் கேஎல் ராகுல் அடித்த அத்தனை சதங்களும் வெளிநாடுகளில் வந்தவை தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், 3,211 நாட்களுக்கு பின் சொந்த மண்ணில் கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இந்த மகிழ்ச்சியில் கேஎல் ராகுல் விசிலடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.