IND vs WI: உலக சாதனை படைத்த குல்தீப் யாதவ்.. 68 ஆண்டு கால இங்கிலாந்து வீரரின் சாதனையை முறியடித்தார்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் 'சைனாமேன்' சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் டெல்லி டெஸ்ட்டில் சரித்திரம் படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 68 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ஒரு மகத்தான உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் 26.5 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ், 82 ரன்களை விட்டுக்கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்து இருந்தது. அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது. அதனால் இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார்.
சரித்திரத்தில் இடம்பிடித்த சாதனை
குல்தீப் யாதவின் இந்த 5 விக்கெட் செயல்பாடு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் (Left-arm wrist spinner) அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையைச் சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு, இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜானி வார்டில் (Johnny Wardle) மட்டுமே 5 முறை இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். 1950-களில் வார்டில் செய்த இந்த 68 ஆண்டு கால சாதனையை, தற்போது குல்தீப் யாதவ் சமன் செய்துள்ளார்.
இந்தச் சாதனையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வார்டில் இந்தச் சாதனையை நிகழ்த்த 28 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், குல்தீப் யாதவ் வெறும் 15 போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள்:
- குல்தீப் யாதவ் (இந்தியா) - 5 (15 டெஸ்ட்களில்)
- ஜானி வார்டில் (இங்கிலாந்து) - 5 (28 டெஸ்ட்களில்)
- பால் ஆடம்ஸ் (தென்னாப்பிரிக்கா) - 4 (45 டெஸ்ட்களில்)
IND vs WI: குல்தீப் வெறியாட்டம்.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஃபாலோ ஆன்.. எத்தனை ரன்கள் பின்தங்கியது?
வெஸ்ட் இண்டீஸுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழும் குல்தீப்
குல்தீப் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எப்போதுமே சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அந்த அணிக்கு எதிராக அவரது புள்ளிவிவரங்கள் பிரமிக்க வைக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக குல்தீப் யாதவ் வீழ்த்திய விக்கெட்கள் -
- டெஸ்ட்: 4 போட்டிகள் | 19 விக்கெட்டுகள்
- ஒருநாள்: 19 போட்டிகள் | 33 விக்கெட்டுகள்
- டி20: 9 போட்டிகள் | 17 விக்கெட்டுகள்


Click it and Unblock the Notifications