Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுத்ததே நீங்கதான்".. ஜாம்பவான் வார்த்தையால் நெகிழ்ந்து போன சேவாக்

டெல்லி: கிரிக்கெட்டின் 'கிங்' என்று வர்ணிக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கைப் புகழ்ந்து பேசியிருப்பது, கிரிக்கெட் உலகில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சரிந்து கொண்டு இருந்த டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துயிர் கொடுத்ததே சேவாக்தான்" என்று விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்ட, அதற்கு சேவாக் பணிவுடன் பதிலளித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சேவாக் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார். "நான் சேவாக் பேட்டிங் செய்வதைப் பார்க்கும்போது, என்னையே அவரிடம் பார்த்தேன். ஷாஹித் அஃப்ரிடி, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரை விட சேவாக்கை நான் மிகவும் அபாயகரமானவர் என்பதை உணர்ந்தேன்" என்று விவியன் ரிச்சர்ட்ஸ் குறிப்பிட்டார்.

மேலும் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட் தனது பொலிவை இழந்து மங்கி வந்த ஒரு காலகட்டம் அது. ஆனால், சேவாக் அந்த வடிவத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தார். அவருக்காக நான் அதிகாலை 3 மணிக்கே எழுந்து ஆட்டத்தைப் பார்ப்பேன்" என்று தெரிவித்தார்.

IND vs WI Legend Vivian Richards Praises Virender Sehwag for reviving Test Cricket interests

நெகிழ்ச்சியுடன் பதிலளித்த சேவாக்

கிரிக்கெட் ஜாம்பவானின் இந்தப் பாராட்டு மழையால் நெகிழ்ந்துபோன வீரேந்திர சேவாக், இன்று தனது ட்விட்டர் (X) பக்கத்தில் ரிச்சர்ட்ஸுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மிக்க நன்றி சார்.. பந்துவீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் பார்த்து பயப்பட வைத்ததே நீங்கள்தான்; நான் அந்தப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தினேன், அவ்வளவே. அடித்து ஆடும் ஆட்டத்தில் மகிழ்ச்சி இருக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் ஒருபோதும் சாகாது!" என்று சேவாக் பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் இலக்கணத்தையே மாற்றியமைத்தவர் என்று போற்றப்படும் சேவாக்கிற்கு, அதே போன்ற ஆட்டத்திறன் கொண்ட ஜாம்பவான் ரிச்சர்ட்ஸிடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில்லையும் பாராட்டிய ரிச்சர்ட்ஸ்

சேவாக்கைப் பாராட்டியதோடு, தற்போதைய இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில்லையும் விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டத் தவறவில்லை. "கடந்த 4-5 ஆண்டுகளாக சுப்மன் கில் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது, அவர் மூன்று வடிவங்களிலும் ஜொலிப்பார் என்று எனக்கு முன்பே தெரியும். அவருக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது" என்று விவியன் ரிச்சர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

Story first published: Monday, October 13, 2025, 15:05 [IST]
Other articles published on Oct 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+