IND vs WI: டெஸ்ட்க்கு சிராஜ் மாதிரி,டி20க்கு இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 பவுலர்-தினேஷ் கார்த்திக்
மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருவதாக முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர், வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகத் திகழ்கிறார்.
2024 பிற்பகுதியில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் மாயங்க் யாதவ் மீண்டும் களமிறங்கினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய போட்டிகளில் பங்கேற்காத போதிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த தொடரில் அவர் சிறப்பாக கம்பேக் கொடுத்துள்ளார்.

24 வயதான மாயங்க் யாதவ், ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் புதிய பந்தில் அசத்தி, முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் இந்தியா 224 ரன்களை வெற்றிகரமாக தற்காத்து, தொடரில் 2-1 என முன்னிலை பெற உதவியது.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், "இந்த போட்டியிலும் அவர் அதிவேகமாக பந்துவீசினார். விக்கெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும், பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சரியான லென்த்தில் பந்துவீசுவது அவருக்கு கை கொடுக்கிறது. காயத்திற்குப் பிறகு மீண்டும் தனது பழைய வேகத்தைக் கண்டடைந்தது பாராட்டுக்குரியது. நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கும்போது தயக்கம் இருப்பது இயல்பு, ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் அவரது தன்னம்பிக்கை அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டார்.
அக்டோபர் 22 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் மாயங்க் யாதவ் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 250 ரன்களை தற்காத்துக்கொள்ளத் தவறினாலும், மூன்றாவது போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வலுவாக மீண்டு வந்தனர்.
மாயங்க் யாதவ் சிக்கனமாக பந்துவீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்திய நிலையில், முதன்மை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஃபார்மில் இருந்த ஷாய் ஹோப் உட்பட மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இது குறித்து பாராட்டிய அவர், "400க்கும் மேற்பட்ட ரன்கள் குவிகின்ற ஒரு மைதானத்தில், முக்கியமான தருணத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பந்துவீச்சாளருக்கு இந்த விருதை வழங்க விரும்புவோம். அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவுண்டரிகள் அடிக்கப்படும் இந்த சிறிய மைதானத்தில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், அவர் வீழ்த்திய விக்கெட்டுகளே இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தன," என்று கார்த்திக் கூறினார்.
"அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசி தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது சிராஜ் செய்வது போல, டி20 கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். முக்கியமான ஓவர்களை வீசுவதுடன், தீவிரமான மனநிலையுடன் செயல்படுகிறார்" என்று பாராட்டிப் பேசினார். அர்ஷ்தீப் சிங் நடப்பு ஆண்டில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார். அவர் 25 போட்டிகளில் 23.88 சராசரி மற்றும் 9.08 எகானமியுடன் 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications


