மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முக்கிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக ஜடேஜா இருந்தார்.
இதனால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து தொடரில் துணை கேப்டனாக இருந்த ரிஷப் பன்ட் காயம் காரணமாக தற்போது வெளியேறிய நிலையில் ஜடேஜாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஜடேஜா தொடர்ந்து துணை கேப்டனாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து தொடரில் களமிறங்கிய ஏழு வீரர்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதை போன்று அனுபவ வீரர் கருண் நாயர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வேக பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப், ஆர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர், விக்கெட் கீப்பர் பண்ட் ஆகியோரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறவில்லை. புதிய வீரர்களாக அக்சர் பட்டேல், தேவுதட் படிக்கல் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் உள்ளனர். இதனால் இந்த நான்கு பேரில் யாருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்று பவுலர்களாக பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.