மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் மற்றும் அனுபவ வீரரான முகமது ஷமி ஆகிய இருவரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து அஜித் அகர்கர் பதில் அளித்துள்ளார். முகமது ஷமி இன்னும் சில கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கூறிய அவர், சர்ஃபராஸ் கான் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 2ல் தொடங்க உள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், சுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் ஆடிய இந்திய அணியில் இடம்பிடித்த 6 வீரர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், ரிஷப் பண்ட், அபிமன்யூ ஈஸ்வரன், அர்ஷ்தீப் சிங், கருண் நாயர் ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சர்ஃபராஸ் கான் மற்றும் முகமது ஷமி உள்ளிட்டோரும் சேர்க்கப்படவில்லை. அண்மையில் புச்சி பாபு மற்றும் துலீப் டிராபி ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் இருவரும் விளையாடி இருந்தனர்.
இதனால் இருவருக்கும் நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருமே சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பேசுகையில், சர்ஃபராஸ் கான் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். முகமது ஷமி குறித்து எந்த அப்டேட்டும் என்னிடம் கிடையாது.
ஒரு கிரிக்கெட் வீரராக முகமது ஷமியால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முகமது ஷமி தற்சமயம் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா 2 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறார். நாங்கள் இதுதொடர்பாக அணியின் பிசியோவிடமும் பேசி இருக்கிறோம்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் பும்ராவுக்கு நல்ல ஓய்வு கிடைத்தது. இன்னும் சொல்லப் போனால் பும்ரா 5வது டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. சுமார் 5 வாரங்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்துள்ளார். ஆசியக் கோப்பை தொடரின் போதும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் 2 போட்டிகளிலும் ஆடுவார் என்று தெரிவித்துள்ளார்.