IND vs WI: ஸ்ரேயாஸ் கேப்டன்ஷி சரியில்லை.. வெஸ்ட் இண்டீஸை 247 ரன்கள் அடிக்கவிட்டுருக்க கூடாது..கையிப்
ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் செயல்பாடுகளை முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தபோதிலும், ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே ரன்களை வாரி வழங்கினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3.3 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்ததுடன், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. போட்டி குறித்து பேசிய முகமது கைஃப், இந்திய பந்துவீச்சாளர்கள் அடிப்படை விஷயங்களைக் கூட சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து பேசிய முகமது கையிப், "ஒருநாள் தொடர் உட்பட இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கத் தவறி வருகிறது. அனுபவமற்ற இந்த பந்துவீச்சு தாக்குதலுக்கு ஃபீல்டிங்கும் கை கொடுக்கவில்லை. களத்தில் அனைத்துத் துறைகளிலும் இந்தியா சொதப்பியதாலேயே எதிரணி சுமார் 250 ரன்களை எட்ட முடிந்தது" என்று தெரிவித்தார்.
"ஹைதராபாத் ஆடுகளத்தில் ஸ்லோ பவுன்சர்கள் மிகவும் பயனுள்ள பந்துகளாகும். பாட் கம்மின்ஸ் இந்த உத்தியைப் பயன்படுத்தி எவ்வாறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்திய அணி ஸ்லோ பவுன்சர்களைப் பயன்படுத்தாமல் பெரிய தவறைச் செய்துவிட்டது" என்றார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால், கடைசி ஓவரில் கூடுதல் ஃபீல்டரை உள்வட்டத்திற்குள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்துடன், 13 வைடுகள் உட்பட மொத்தம் 18 எக்ஸ்ட்ரா ரன்களையும் இந்திய பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணியால் மகிழ்ச்சியடைய முடியாது என்று முகமது கைஃப் தெரிவித்தார். பந்துவீச்சு, கேட்ச் பிடிப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிப்பது என எந்தவொரு குறைபாடும் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வெஸ்ட் இண்டீஸ் குறைந்த தரவரிசையில் உள்ள அணி என்றும், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்ளும்போது இந்த பந்துவீச்சு குறித்து ரசிகர்கள் கவலைப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் பந்துவீசிய ஆறு இந்திய வீரர்களில் ஐந்து பேர் ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். நான்கு ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தார்.


Click it and Unblock the Notifications


