கயானா : வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்.
இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. 160 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி இந்த ஆட்டத்தில் துரத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

அப்படி செய்தால் இந்த மைதானத்தில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். எனினும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும் கில் 6 ரன்களில் ஆட்டம் இழக்க களத்திற்கு வந்த சூரிய குமார் யாதவ் முதல் பந்தில் இருந்தே பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டார்.வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை பவுண்டர்களுக்கு சூரிய குமார் யாதவ் பறக்க விட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ஆடுகளம் தோய்வாக இருந்தாலும் மலை மேகங்கள் சூழ்ந்து இருந்தாலும் அது எதுவும் சூரிய குமாரியாதவை கட்டுப்படுத்த முடியவில்லை. வில்லன்களிடமிருந்து ஹீரோயினை காப்பாற்ற வந்த ஹீரோ போல் நெருக்கடியான சூழலில் களத்திற்குள் வந்த சூரியகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து கட்டி தாம் ஏன் உலகின் முதல் நிலை வீரர் என்பதை நிரூபித்தார்.
23 பந்துகளில் எல்லாம் சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்து அலறவிட்டார். இதில் ஏழு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். அத்துடன் சூரியகுமார் தன்னுடைய ஆட்டத்தை நிறுத்தவில்லை. எதிர் திசையில் திலக் வர்மா நல்ல கம்பெனி கொடுக்க சூரியகுமார் ரன் அடிக்கும் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார். மொத்தமாக 10 பவுண்டரிகள் நான்கு இமாலய சிக்சர்கள் அடிக்க 44 பந்துகளில் சூரிய குமார் யாதவ் 83 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் சூரியகுமார் யாதவ் நிறைய சாதனைகளையும் படைத்திருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை சூரிய குமார் யாதவ் படைத்தார். இந்த மைல் கல்லை ரோகித் சர்மா 84 இன்னிங்ஸிலும் விராட் கோலி 96 இன்னிங்சிலும் எட்டிய நிலையில் சூரிய குமார் இந்த மைல் கல்லை 49 இன்னிங்சில் எட்டி அதிவேகமாக 100 சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதேபோன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி சூரியகுமார் யாதவ் நான்காம் இடத்தை பிடித்தார். தவான் 1759 ரன்கள் எடுத்த நிலையில் அவரை சூரியகுமார் யாதவ் பின்னுக்கு தள்ளியிருக்கிறார். இந்திய டி20 அணிக்கு 2021 ஆம் ஆண்டு வந்த சூரியகுமார் யாதவ் இரண்டே ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.