டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகையே ஆட்டிப்படைத்தது. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஆண்டுகளுக்கு மேல் விளங்கியது. ஆனால் தற்போது வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம் போல் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் கிரிக்கெட்டுக்காக தாங்கள் எவ்வளவோ செய்தும் அதிலிருந்து பணம் சம்பாதிக்கவில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சாமி தெரிவித்துள்ளார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"வரலாற்றை திரும்பிப் பார்த்தால் நாங்கள் கிரிக்கெட்டுக்காக எவ்வளவு செய்திருக்கின்றோம். எவ்வளவு பாரம்பரியமிக்க அணியாக இருந்திருக்கிறோம் என்று பலருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் தற்போது அந்த அளவுக்கு விளையாடுவதில்லை."
"வெஸ்ட் இண்டீஸ் அணி சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு அபரிதமானது. எனவே நாங்கள் கேட்பதற்கு தகுதி இருப்பதாகவே நினைக்கின்றோம். நான் எங்கள் அணியின் முன்னாள் வீரர்களிடம் பேசி இருக்கிறேன். உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும்போது அவர்கள் பல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்."
"குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பல தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் செல்லும் நாடுகள் எல்லாம் நன்றாக பணம் சம்பாதித்து இருக்கிறது. தற்போது இந்தியா எப்படி இருக்கிறதோ அதே போல் தான் அந்த காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது. தற்போது இந்தியா அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்."
"ஏனென்றால் இந்தியா தங்களது நாட்டிற்கு வந்து கிரிக்கெட் விளையாடினால் வணிகம் அதிகரிக்கும் என்பது தான் காரணம். இதைத்தான் ஒரு காலத்தில் நாங்கள் செய்து கொண்டிருந்தோம். ஆனால் இந்தியா தற்போது சம்பாதிக்கும் அளவுக்கு நாங்கள் பணத்தை அப்போது சம்பாதிக்கவில்லை. தற்போது கிரிக்கெட்டை பலப்படுத்துவதற்கு எங்களிடம் போதுமான நிதி இல்லை. நிதி திரட்டுவதற்கு நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்."
"ஒரு பயிற்சியாளராக தற்போது நாங்கள் ஒரு வீரரை அணிக்கு தேர்ந்தெடுத்தோம் என்றால், அவர்கள் எங்கள் நாட்டிற்கு விளையாட ஒப்புக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுகிறது.அந்த அளவுக்கு தான் எங்களுடைய கிரிக்கெட் இருக்கிறது. காலம் மாறிவிட்டது. எங்களிடம் என்ன இருக்கிறதோ, அதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் பணியாற்றுகிறோம். உலகில் உள்ள டி20 லீக் தொடருக்கு ஏற்ற வகையில் எங்களுடைய அணிகள் இல்லை."
"இதுதான் முக்கிய பிரச்சனை. ஆனால் நான் எங்கள் வீரர்களிடம் இதை மட்டும் தான் சொல்கின்றேன். நமக்கு போதிய வசதி இல்லை, போதிய ஆள் பலம் இல்லை. போதிய நிதி இல்லை. போதிய தொழில்நுட்பம் இல்லை என்று தான் குறை கூறி வருகிறோம். ஆனால் அவர்களைப் போல் நாம் கடுமையாக பணியாற்றுகிறோமா என்பதை பார்க்க வேண்டும்."
"எதிரணியை விட நாம் கடுமையாக உழைத்தால் நிச்சயம் அவர்களுடைய லெவலுக்கு நம்மாலும் வர முடியும். நாங்கள் கடைசியாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற போது நான் கைக்குழந்தையாக இருந்திருப்பேன். அது 1983 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் தற்போது வரை எங்களால் தொடரை வெல்ல முடியவில்லை. தற்போது பல விமர்சனத்திற்கு நான் ஆளாகி வருகிறேன். ஆனால் இதற்கான அடிப்படை காரணம்.வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கவில்லை. அது பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று டேரன் சாமி கூறியுள்ளார்.