Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எதுக்கு கிரிக்கெட் ஆடணும்?” கருண் நாயரின் மனைவி கொந்தளிப்பு.. ரஞ்சி டிராபிக்கு மதிப்பே இல்லையா?

மும்பை: 8 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்பிய கருண் நாயரின் கம்பேக் கதை, ஒரே ஒரு தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயரின் பெயர் இடம்பெறாத நிலையில், இந்த முடிவு தனக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அவர் வேதனை தெரிவித்திருந்தார்.

தற்போது, அவரது மனைவி சனயா தங்கரிவாலா நாயர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு முறையைக் கடுமையாகச் சாடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு காரசாரமான பதிவு, கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

IND vs WI Wife of Karun Nair Blasts Selectors on Social Media after India test squad snub

"ஒரே ஒரு இன்னிங்ஸ்" - அஜித் அகர்கர்:

கருண் நாயர் நீக்கப்பட்டது குறித்துப் பேசிய தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், "ஒரே ஒரு இன்னிங்ஸை மட்டும் ஒரு வீரரின் தேர்வை வைத்து கணக்கிட முடியாது. துரதிர்ஷ்டவசமாக, எல்லோருக்குமே 15-20 வாய்ப்புகளை எங்களால் வழங்க முடியாது" என்று விளக்கமளித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கருண் நாயர் 4 டெஸ்ட் போட்டிகளில் 205 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து இருந்தார். அதைத்தான் சுட்டிக் காட்டி இருந்தார் அகர்கர்.

சமூக வலைதளத்தில் கொந்தளித்த மனைவி:

தேர்வுக் குழுவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள கருண் நாயரின் மனைவி சனயா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், இது இந்திய கிரிக்கெட் அமைப்பின் நோக்கத்திற்கே முற்றிலும் முரணானது என்றும் வெளுத்து வாங்கியுள்ளார். தனது பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

"தேசிய அணியில் ஒருவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், அந்த வீரருக்கு அடுத்தகட்ட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்தியா 'ஏ' அணி உள்ளது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குத் தேசிய அணிக்கு வருவதற்கான ஒரு மேடையை அமைத்துக் கொடுப்பதும், சர்வதேசப் போட்டிகளில் சறுக்கலைச் சந்தித்தவர்களுக்கு மீண்டும் தங்களை நிரூபிக்க ஒரு நியாயமான வாய்ப்பை வழங்குவதும்தான் இதன் நோக்கம்.

உள்நாட்டு கிரிக்கெட்டும், இந்தியா 'ஏ' அணியும் தங்களை நிரூபிக்கும் களங்களாக இருக்க வேண்டும். அங்கே ரன்களும், செயல்திறனும் மதிக்கப்பட வேண்டும். அந்தப் பாதை மதிக்கப்படவில்லை என்றால், தேசிய அணிக்குத் தேர்வாக இன்னும் என்னதான் செய்ய வேண்டும், உண்மையான தேர்வுக்கான அளவுகோல் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

இது ஒரு தனிப்பட்ட வீரரை விடப் பெரியது. இது எல்லாவற்றிற்கும் மேலாக மதிப்பு அளிக்கப்படும் ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கை பற்றியது" என்று பிசிசிஐ குருதி சனயா காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.

ரஞ்சி டிராபி புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிய சனயா:

தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, 2024-25 ரஞ்சி டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்களின் பட்டியலையும் சனயா தனது பதிவில் பகிர்ந்துள்ளார். அந்தப் பட்டியலில் உள்ள ஒருவருக்குக் கூட, ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலோ அல்லது இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியிலோ இடம் கிடைக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"ஒரு ரஞ்சி டிராபி வெற்றியாளரும், நாட்டின் உள்நாட்டு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவருமான ஒருவருக்கு, இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் எப்படி இடம் கிடைக்காமல் போனது?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ரஞ்சி சீசனில், கருண் நாயர் 16 இன்னிங்ஸ்களில் 863 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டு இந்தியர்களில் வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு இரண்டாவது வீரர் கருண் நாயர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவியின் இந்தப் பதிவு, இந்திய கிரிக்கெட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை உள்ளதா என்ற விவாதத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது.

Story first published: Friday, September 26, 2025, 10:00 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+