IND vs ZIM: அடுத்த ஹிட்மேன்.. 13 பந்தில் கதிகலங்கிப் போன ஜிம்பாப்வே.. கொண்டாடும் ரசிகர்கள்
ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஆடிய ஆட்டத்தால் ஜிம்பாப்வே கதி கலங்கி போனது. அவர் இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து தெறிக்க விட்டார்.
குறிப்பாக அபிஷேக் சர்மா முதல் ஐம்பது ரன்களை அடிக்க 33 பந்துகளை எடுத்துக்கொண்டார். அடுத்த ஐம்பது ரன்களை அடிக்க வரும் 13 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். ரோஹித் சர்மாவின் இரட்டை சதங்கள் அடிக்கும் போது இதே போன்ற பாணியை தான் கடைப்பிடித்து இருப்பார். அவர் இரட்டை சதம் அடித்த போது முதல் நூறு ரன்களை அடிக்க 70 முதல் 80 பந்துகளை எடுத்துக் கொண்டால், அடுத்த 100 ரன்கள் அடிக்க 30 முதல் 40 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பாணியை கடைப்பிடித்துள்ள அபிஷேக் சர்மா கடந்த போட்டியில் டக் அவுட் ஆனதற்கு இரண்டாவது போட்டியில் சதம் அடித்து ஈடு கட்டி இருக்கிறார். இந்த போட்டியில் அவர் 46 பந்துகளில் சதம் அடித்தார். அடுத்து அதற்கு அடுத்த பந்திலேயே அவர் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் அவரது இடத்தை நிரப்ப அடுத்த "சர்மா" வந்துள்ளார் என ரசிகர்கள் அபிஷேக் சர்மாவின் சதத்தை கொண்டாடி வருகிறார்கள்.
அவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது. ருதராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே அணி ஏழு பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த முயன்றது. ஆனால், எந்த பந்துவீச்சாளரையும் அவர் அசாதாரணமாக எதிர் கொண்டார். தனது இரண்டாவது டி20 போட்டியிலேயே சதம் அடித்த அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications