IND vs ZIM: பிளேயிங் லெவனில் இருந்து அபிஷேக் சர்மாவை நீக்கலாம்.. கம்பீர் எடுக்கப் போகும் முடிவு
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி மோத உள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடியாக ஒரு மாற்றம் நடைபெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவை பயிற்சியாளர் கம்பீர் நீக்கவாய்ப்பு உள்ளதாக இந்திய அணி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த தொடரில் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றும் முதல் தொடர் வெற்றியாக இது அமையும்.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சமீபகாலமாக ரன் குவிக்க சிரமப்பட்டு வருகிறார். ஜிம்பாப்வே டி20 தொடரின் முதல் டி20 போட்டியில் 8 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் 10, 16, 3 என குறைந்த ரன்களிலேயே வெளியேறினார். இதனால் அவருக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங்கிற்குத் தொடக்க வீரராக வாய்ப்பு கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகத் தொடர்ந்து இரண்டாவது சீசனாக 500 க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து பிரப்சிம்ரன் சிங் அசத்தியிருந்தார். இதனால் அவருக்கு சர்வதேச டி20 அரங்கில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். அதே நேரத்தில், அணி நிர்வாகம் அபிஷேக் சர்மாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க நினைத்தால், அவரே தொடக்க வீரராக களம் இறங்குவார்.
பந்துவீச்சு வரிசையில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் இந்தியா களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் யாஷ் தாக்குருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:
வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா / பிரப்சிம்ரன் சிங், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ்.


Click it and Unblock the Notifications
