IND vs ZIM: ரிங்கு சிங் செய்த செயல்.. அரண்டு போன ஜிம்பாப்வே வீரர்கள்.. 104 மீட்டர் பறந்த பந்து
ஹராரே: இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் அடித்த இமாலய சிக்ஸரை பார்த்து ஜிம்பாப்வே வீரர்கள் அரண்டு போனார்கள். இந்தியா - ஜிம்பாவே அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடி ஆட்டத்தில் மிரட்டியது.
துவக்க வீரர் அபிஷேக்சர்மா 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் இணைந்து கடைசி ஆறு ஓவர்களில் பவுண்டரி மழை பொழிந்தனர்.

ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தார். மறுபுறம் ரிங்கு சிங் நிதானமாக ஆடத் துவங்கி கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸர்களை பறக்க விட்டார். அவர் 22 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங், அபிஷேக் ஷர்மாவை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் இந்தப் போட்டியில் 212 ஆக இருந்தது. அவரை முந்திய ரிங்கு சிங் 218 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தார். 19வது ஓவரின் நான்காவது பந்தில் அவர் அடித்த ஒரு சிக்ஸ் 104 மீட்டர் தூரம் வரை சென்றது. கடந்த போட்டியில் டக் அவுட் ஆகி இருந்த ரிங்கு சிங், இந்த போட்டியில் அடித்த இமாலய சிக்சரை பார்த்து ஜிம்பாப்வே வீரர்கள் மிரண்டு போனார்கள்.
ஏற்கனவே, அபிஷேக் சர்மா ஆட்டத்தால் நிலைகுலைந்து போய் இருந்த ஜிம்பாப்வே வீரர்கள், ரிங்கு சிங்கின் ஆட்டத்தால் தன்னம்பிக்கை இழந்தனர். "இதுதான் ரிங்கு சிங் அடி" என இந்திய ரசிகர்கள் அவரது ஆட்டத்தை கொண்டாடினர். இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications