ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் குவித்த நிலையில், அவர் 2024ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்து இருக்கிறார். முன்பு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற இந்திய ஜாம்பவான்கள் இந்த சாதனையை பல முறை செய்த நிலையில் ஜெய்ஸ்வால் அவர்கள் வரிசையில் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய 3வது டி20 போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கினார் ஜெய்ஸ்வால். அவர் இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். இதை அடுத்து அவர் 2024 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 848 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு இதுவரை 9 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடி, 848 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 65 ஆகும். இதில் அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 740 ரன்கள் குவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு 3 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 108 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்த நிலையில் அவர் ஒட்டுமொத்தமாக 848 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு இரட்டை சதம், நான்கு அரை சதம் அடங்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடி இருந்ததன் காரணமாகவே இத்தனை ரன்கள் குவித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட ஜெய்ஸ்வால் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், அவர் விளையாடி இருந்தால் நிச்சயம் இப்போதே அவர் ஆயிரம் சர்வதேச ரன்களை தாண்டி ரன் குவித்து இருக்கக்கூடும்.
2024 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சத்ரான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 27 இன்னிங்ஸ்களில் 844 ரன்கள் குவித்துள்ளார். ரோஹித் சர்மா 22 இன்னிங்ஸ்களில் 833 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்தில் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டின் முடிவில் ஜெய்ஸ்வால் சர்வதேச போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.