IND vs ZIM: சுப்மன் கில் செய்த செயல்.. நொந்து போன ஜெய்ஸ்வால்.. கொந்தளித்த ரசிகர்கள்.. என்ன நடந்தது?
ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய 4-வது டி20 போட்டியில் கேப்டன் சுப்மன் கில் செய்த செயலால் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஜெய்ஸ்வால் சதம் அடிக்கக்கூடாது என்பதற்காகவே சுப்மன் கில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் தானே ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டார் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். என்ன நடந்தது?
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இருவரும் விக்கெட் இழக்காமல் அதிரடியாக ரன் சேர்த்தனர். சுப்மன் கில்லை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார் ஜெய்ஸ்வால். அவர் அதிக பவுண்டரிகளை அடித்தார்.

ஆனால், சுப்மன் கில் சற்று நிதானமாகவே ஆடினார். குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே பவுண்டரியாக மாற்றினார். இந்த நிலையில், 13 வது ஓவரின் முடிவில் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
சுப்மன் கில் அரைசதம் அடிக்க 9 ரன்களும், ஜெய்ஸ்வால் சதம் அடிக்க 17 ரன்களும் தேவை என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் சதம் அடிக்க விட்டுக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படி இல்லை என்றாலும் இருவரும் கணக்கு போட்டு ஆடி, தங்களின் அரைசதம் மற்றும் சதத்தை நிறைவு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், 14வது ஓவரில் சுப்மன் கில் 5 பந்துகளை தானே ஆடினார். ஒரு பவுண்டரி அடித்த அவர், ஐந்தாவது பந்தில் ஒரு சிங்கிள் ரன் ஓடினார். ஆறாவது பந்தில் ஜெய்ஸ்வால் ரன் எடுக்க முடியவில்லை. அடுத்து 15 வது ஓவரிலும் சுப்மன் கில் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளை எடுத்துக் கொண்ட அவர், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த போது தனது அரை சதத்தை நிறைவு செய்தார். அடுத்து வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அவர் ஜெய்ஸ்வால் சதம் அடிக்க வேண்டி ஒரு ரன் ஓடி அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அதற்கு அடுத்த பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார் சுப்மன் கில். அதனால், ஜெய்ஸ்வால் சதம் அடிக்க முடியாமல் போனது. அதன் பின் ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸ் அடித்தாலும் அவரால் 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 15.2 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களும், சுப்மன் கில் 39 பந்துகளில் 58 ரன்களும் எடுத்து இருந்தனர்.
14வது ஓவரில் இருந்து ஸ்ட்ரைக்கையும் கொடுக்காமல், ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில் சுப்மன் கில் சிக்ஸ் அடித்து இருக்கிறார் என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்கு முந்தைய போட்டியில் ஜெய்ஸ்வால் அணிக்கு திரும்பியதால் அவருக்கு துவக்க வீரர் வாய்ப்பை அளித்து, அபிஷேக் ஷர்மாவை மூன்றாம் வரிசைக்கு மாற்றி இருந்தார் கேப்டன் சுப்மன் கில். இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்த அபிஷேக் சர்மா, மூன்றாம் வரிசையில் களமிறங்கிய போது ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்.
ஒரு கேப்டனாக சுப்மன் கில் தனது இடத்தை தான் மூன்றம வரிசைக்கு மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், சதம் அடித்த அபிஷேக் ஷர்மாவை மூன்றாம் வரிசைக்கு மாற்றினார் என அப்போதே அவர் சுயநலமாக செயல்படுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. தற்போது தனது பேட்டிங் வரிசையையும் தக்க வைத்துக் கொண்டு, ஜெய்ஸ்வாலின் சதத்தையும் அவர் கெடுத்ததாக விமர்சனம் எழுந்து உள்ளது. அதே சமயம், சுப்மன் கில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர் என்ன செய்தாலும் குற்றம் சொல்லக்கூடாது என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications