ஹராரே: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த இளம் வீரர் ரியான் பராக், இந்த தொடரில் இனி பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற மாட்டார் என கூறப்படுகிறது. அவர் இந்திய அணி ஆடும் போட்டிகளை பார்க்க மாட்டேன் என 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் போது பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரியான் பராக் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதன் பின் உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனினும், கடைசி இரண்டு போட்டிகளில் சில வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டது ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் அவருக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த உள்ளூர் டி20 தொடரான சையது முஸ்டாக் அலி தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் ரியான் பராக் அதிரடியாக ரன் குவித்து இருந்தார். அதனால், தனக்கு 2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த்தார். ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதை அடுத்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் உலகக் கோப்பை அணியில் இடம் பெறாததால் உலக கோப்பையில் இந்தியா ஆடும் போட்டிகளை பார்க்க மாட்டேன் என கூறியிருந்தார். இளம் வயதிலேயே இது போன்ற தேவையற்ற பேச்சுக்களால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. பல வீரர்களுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் எல்லாம் அமைதியாக தான் இருக்கிறார்கள் சிலர் தேர்வுக் குழுவினரை கூட சாடி இருக்கிறார்கள். ஆனால், இந்தியராக இருக்கும் யாரும் இந்திய அணி ஆடும் போட்டியை பார்க்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள் என ரசிகர்கள் விளாசினர்.

இந்த நிலையில், ரியான் பராக்-கிற்கு ஜிம்பாப்வே டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் தனக்கு வாய்ப்பு கிடைக்காத வெறியில் இருந்ததால், இந்த தொடரில் அவர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்கு முதல் போட்டியில் மட்டுமே பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
இதை அடுத்து அவர் மீது மீண்டும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். மூன்றாம் வரிசை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் இருந்த நிலையில், கடைசி ஆறு ஓவர்களில் பேட்டிங் செய்ய நான்காம் வரிசையில் ரிங்கு சிங் அனுப்பப்பட்டார்.
ஆனால், அந்த இடத்தில் ரியான் பராக் தான் பேட்டிங் ஆடி இருக்க வேண்டும். ஆனால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் லக்ஷ்மன் அவரை நம்பவில்லை. அதே சமயம். நான்காம் வரிசையில் இறங்கிய ரிங்கு சிங் அந்த போட்டியில் 22 பந்துகளில் 48 ரன்கள் குவித்து தனது ஃபார்மை நிரூபித்திருந்தார். இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோர் டி20 அணியில் இணைந்தனர். அவர்களுக்கு இடம் அளித்து தனது வாய்ப்பை இழந்தார் ரியான் பராக். அவர் முன்னதாக இந்திய அணி குறித்து பேசி இருந்ததாலும், முதல் போட்டியில் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்த தவறியதாலும், அவருக்கு இந்த தொடரில் இனி வாய்ப்பு அளிக்கப்படாது என கூறப்படுகிறது.