IND vs ZIM: சிஎஸ்கே கேப்டனின் மிரள வைக்கும் ரெக்கார்டு.. இந்திய வீரர்களிலேயே அதிக ஸ்ட்ரைக் ரேட்
ஹராரே: இந்திய டி20 அணியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில், தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். மேலும், சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு இணையாக ஒரு பேட்ஸ்மேன் தற்போது இந்திய அணியில் உருவாகி இருக்கிறார்.
அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான். பவர்பிளே அல்லாத ஓவர்களில், சூர்யகுமார் யாதவுக்கு இணையான ஸ்ட்ரைக் ரேட்டில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் குவித்து இருக்கும் புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது. பவர் பிளே ஓவர்கள் என்பது டி20 போட்டியில் முதல் ஆறு ஓவர்கள் ஆகும். அப்போது ஆடுகளத்தின் பவுண்டரி எல்லையில் அதிகபட்சம் இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் எளிதாக பவுண்டரி அடிக்கலாம். எனவே, அந்த ஓவர்களை தாண்டி 7வது ஓவர் முதல் 20வது ஓவர் வரையில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் பேட்ஸ்மேன்கள் குறித்த பட்டியல் தான் இது.

கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பவர் பிளே அல்லாத ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன்கள் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் குறைந்தபட்சம் 350 ரன்கள் குவித்த வீரர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
முதல் இடத்தில் ஃபினிஷர் ஆன ரிங்கு சிங் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 181.4 ஆக உள்ளது. 2வது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 178. மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 177.8.
இந்த பட்டியலை வைத்து பார்க்கும் போது ருதுராஜ் கெய்க்வாட் சூர்யகுமார் யாதவுக்கு இணையாக பவர் பிளே ஓவர்களுக்கு பின்பு அதிரடியாக ரன் குவித்து வருவது தெரிய வந்துள்ளது. தற்போது இந்திய டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராகவோ அல்லது மூன்றாம் வரிசை வீரராகவோ பேட்டிங் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெரும்பாலும் பவர் பிளே ஓவர்களில் தான் பேட்டிங் இறங்கி ஆடுகிறார். அப்படி இருந்தும் அவர் 11 போட்டிகளில் பவர் பிளே அல்லாத ஓவர்களில் 178 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 381 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது சராசரி 54.4 ஆக உள்ளது.
சூர்யகுமார் யாதவ் பவர் பிளே அல்லாத ஓவர்களில் 47 போட்டிகளில் 1741 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது சராசரி 45.8 ஆக உள்ளது. இதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் சூர்யகுமாருக்கு இணையாக பேட்டிங் ஆடி வருகிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் இனி இந்திய டி20 அணியில் நிரந்தர இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தற்போது இந்திய அணி நிர்வாகம் பல பேட்ஸ்மன்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளித்து வருகிறது. அதனால், இளம் வீரர்கள் இடையே டி20 அணியில் இடம் பெற கடும் போட்டி நிலவி வருகிறது. அதற்கு மத்தியிலும் ருதுராஜ் கெய்க்வாட் நீடித்து இருப்பாரா? என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் அவரது பேட்டிங் குறித்த புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது அவருக்கு நீண்ட கால அடிப்படையில் இந்திய டி20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்யுமா?


Click it and Unblock the Notifications