ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிரள வைக்கும் ஆட்டத்தை ஆடினார். 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக ரன் குவித்த வீரர் ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியிலேயே அந்த சாதனையை செய்து விட்ட ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் ஆடியது.

துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். கேப்டன் சுப்மன் கில் சற்று நிதானமாக ஆடினார். ஆனால், ஜெய்ஸ்வால் எப்போதும் போல பவுண்டரிகளால் ஜிம்பாப்வே பந்து வீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். 29 பந்துகளில் அவர் அரை சதத்தை நிறைவு செய்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வருங்கால நிரந்தர கேப்டனாகவும், சிறந்த துவக்க வீரராகவும் சொல்லப்படும் சுப்மன் கில்லை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு, ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டினார். அவர் 13 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார். 53 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 2024ஆம் ஆண்டு உலக அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து இருக்கும் ஜெய்ஸ்வால் தான் உலகின் சிறந்த துவக்க வீரர் என்பதும் நிரூபணம் ஆனது. அதை சுப்மன் கில் முன்பே அவர் செய்தும் காட்டினார்.
சுப்மன் கில் 39 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லின் நிலையான ஆட்டத்தால் இந்திய அணி 15.2 ஓவர்களில் எல்லாம் 153 ரன்கள் இலக்கை எட்டியது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.