ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் அறிமுகமான அபிஷேக் சர்மா, டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மீண்டும் 2வது டி20 போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதன்பின் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சுப்மன் கில் 2 பந்துகளில் நடையை கட்ட, சந்தித்த முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்சர் அடித்து தனது கணக்கை தொடங்கினார். இதன்பின் பவர் பிளேவின் 3 ஓவர்களை வரை அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா பின்னர் நிதானமாக விளையாடினார். 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அபிஷேக் சர்மா கியரை மாற்றினார்.

மேயர்ஸ் வீசிய 11வது ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களை விளாசினார். இதன் மூலமாக அபிஷேக் சர்மா 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 82 ரன்களில் இருந்த போது, ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசியுள்ளார்.
இறுதியாக 47 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 100 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா விட்டுச் சென்ற இடத்தை அப்படியே எந்தவித அழுத்தமும் இல்லாமல் அபிஷேக் சர்மா எளிதாக நிரப்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது. முதல் 50 ரன்களை 33 பந்துகளில் சேர்த்த அபிஷேக் சர்மா, அடுத்த 50 ரன்களை வெறும் 13 ரன்களை சேர்த்து மிரட்டியுள்ளார்.
அதேபோல் 2வது இன்னிங்ஸிலேயே சதமடித்ததன் மூலமாக இந்திய அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்களிலேயே முதல் சதத்தை விளாசி வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணிக்காக ஆடிய தீபக் ஹூடா 3வது இன்னிங்ஸில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. இதனை 2 இன்னிங்ஸில் அடித்து அபிஷேக் சர்மா வரலாறு படைத்துள்ளார். இதனால் அபிஷேக் சர்மாவின் குருவான யுவராஜ் சிங் மகிழ்ச்சியடைவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.