Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: "ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்.. கவலைப்படாதே”.. அபிஷேக்கிற்கு ஆதரவு கொடுத்த டூ பிளெசிஸ்

சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து ரன் குவிக்கத் திணறி வரும் நிலையில், அவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய பேட்டர்களின் நிலையற்ற ஆட்டமே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

IND vs ZIM Faf du Plessis Backs Abhishek Sharma Don t Listen to Critics Ahead of Crucial Zimbabwe Match

தொடர் சொதப்பலில் அபிஷேக் சர்மா

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் ரன்னை எடுக்கவே அபிஷேக்கிற்கு நான்கு இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இருப்பினும், அந்தப் போட்டியிலும் அவர் 12 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்திலிருந்தே அவர் மீது இருந்த அழுத்தம் காரணமாகவே இந்தச் சொதப்பல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ஃபாப் டூ பிளெசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எதிரணிகளின் வியூகம் என்ன?

அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்துப் பேசிய டூ பிளெசிஸ், "தற்போதைய கிரிக்கெட்டில் அனலிஸ்ட்களின் பங்கு மிகவும் அதிகரித்துவிட்டது. எதிரணிகள் உங்களை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்று புத்திசாலித்தனமாகத் திட்டமிடுகிறார்கள். அபிஷேக் சர்மா ஆஃப் சைடு திசைகளில் மிகச் சிறப்பாக ரன் குவிக்கக் கூடியவர். எனவே, அவருக்கு எதிராக டீப் பாயிண்ட் மற்றும் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசைகளில் பீல்டர்களை நிறுத்துகிறார்கள்.

மேலும், அவர் பேட்டை சுழற்றும் விதம் மிகச் சிறப்பாக இருப்பதால், அவருக்கு எதிராக வேகத்தைக் குறைத்து ஸ்லோயர் பந்துகளாக வீசி திணறடிக்கிறார்கள். இந்த ஸ்லோயர் பந்துகளில் பெரிய ஷாட்களை ஆட முயன்று அவர் பந்தைச் சரியாகக் கணிக்கத் தவறி ஃபீல்டர்களிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார்" என்று விளக்கினார்.

ஸ்லோயர் பந்துகளை எப்படி எதிர்கொள்வது?

ஸ்லோயர் பந்துகளை எதிர்கொள்ளும் உத்தி குறித்து அவர் கூறுகையில், "ஸ்லோயர் பந்துகளை எதிர்கொள்ளும்போது, பேட்டர் தனது கிரீஸை விட்டு இறங்கி வந்து தனக்கான வேகத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது கிரீஸிலேயே நின்று பந்து வரும் வரை சற்று தாமதமாகக் காத்திருந்து விளையாட வேண்டும். நான் அவருக்கு பேட்டிங் அறிவுரை கூற வரவில்லை. ஆனால், எதிரணிகள் அவருக்கு எதிராகத் தொடர்ந்து ஸ்லோயர் பந்துகளையே ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதே முக்கியமாகும்.

ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்

தற்போதுள்ள சூழ்நிலையில், அவரது பேட்டிங் குறித்து 1000 பேர் 1000 விதமான கருத்துகளைக் கூறுவார்கள். 50 பயிற்சியாளர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள். முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் 25 வயதான ஒரு இளம் வீரருக்கு இவ்வளவு எதிர்பார்ப்புகளும், விமர்சனங்களும் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.

ஆனால், அவர் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி, அனைத்து பந்துவீச்சாளர்களையும் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்துள்ளார். தற்போதைய இளம் தலைமுறை டி20 வீரரான அவருக்குத் தடுப்பாட்டம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. அவரிடம் பல்வேறு விதமான அதிரடி ஷாட்கள் உள்ளன.

அவர் தற்போது செய்ய வேண்டியது ஒன்றுதான். வெளியில் வரும் தேவையற்ற விமர்சனங்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், தனது பலத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தி, மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஒருசில இன்னிங்ஸ்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால், இந்த உலகக் கோப்பையில் அவர் நிச்சயம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று ஃபாப் டூ பிளெசிஸ் உறுதியளித்துள்ளார்.

அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளதால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா தனது ஃபார்முக்குத் திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Thursday, February 26, 2026, 8:22 [IST]
Other articles published on Feb 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+