IND vs ZIM: முதல் பந்தாக இருந்தால் என்ன.. சிக்ஸ் அடிக்க கூடாதா.. பறக்கவிடுவதே இலக்கு.. அபிஷேக் சர்மா
ஹராரே: டி20 கிரிக்கெட்டில் முதல் பந்தாகவே இருந்தாலும் சிக்சர் அடிக்க முயற்சிப்பேன் என்று இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில் 2வது டி20 போட்டியில் இந்திய வீரர்களின் பேட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. முதல் 10 ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 160 ரன்களை விளாசியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

30 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்திருந்த அபிஷேக் சர்மா, அடுத்த 16 பந்துகளில் 59 ரன்களை விளாசி சம்பவம் செய்துள்ளார். இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 2வது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்று அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார்.
இதுகுறித்து அபிஷேக் சர்மா பேசுகையில், இந்த போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது என்றே நினைக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்தது சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. இன்றைய நாள் எனக்கானது என்று உணர்ந்தேன். அதற்கேற்றபடி பேட்டிங்கில் செயல்பட்டேன்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஆட்டம் யார் பக்கம் இருக்கிறது என்பது முக்கியம். அதனை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். பயிற்சியாளர்கள், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் ஆகிய மூன்று தரப்பினரும் என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி கூட வேண்டும். ஒரு இளம் வீரராக இன்றைய நாள் எனக்கானதாக உணர்ந்தால், நிச்சயம் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்று ருதுராஜ் அறிவுறுத்தினார். என்னை பொறுத்தவரை எனக்கு ஏற்ற இடத்தில் பந்து பிட்சானால், நிச்சயம் சிக்சருக்கு விளாச முயற்சிப்பேன். அது முதல் பந்தாக இருந்தாலும் சரி என்று தெரிவித்துள்ளார். இந்த இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்சருடன் கணக்கை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications