ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே மைதானத்தில் தொடங்கியுள்ளது. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணியில், 3 வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. ஹராரே மைதானத்தில் தொடங்கியுள்ள முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணிக்காக சுப்மன் கில் முதல்முறையாக கேப்டன்சியை செய்யவுள்ளார். இதனால் அவரின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து சுப்மன் கில் பேசுகையில், நாங்கள் முதலில் ஃபீல்டிங் செய்ய விரும்புகிறோம். இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதாக தோன்றுகிறது. நிச்சயம் 40 ஓவர்களுக்கும் எந்த மாற்றமும் இருக்காது என்று நினைக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடரை இந்திய அணி வென்றுள்ளது. என்னிடம் இருந்தே சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்திய அணியில் 3 வீரர்கள் அறிமுகமாகிறார்கள். அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் பிளேயிங் லெவனில் உள்ளனர் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்வது குறித்து கவலையில்லை. நிச்சயம் பிட்ச் சிறப்பாக உள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் மாற்றம் தொடங்கியுள்ளது. அந்த நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன்சியை அளித்துள்ளார்கள். இளம் வீரர்கள் களமிறங்கி போராடுவதை பார்கக் ஆவலாக உள்ளேன். ஷேன் வில்லியம்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ஜிம்பாப்வே இளம் வீரர்களுடன் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்திய பிளேயிங் லெவன்: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அஹ்மத்
ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: மருமானி, இன்னசண்ட் கையா, பென்னட், சிக்கந்தர் ராசா, மையர்ஸ், கேம்பெல், க்ளைவ், வெஸ்லி, லூக், முசாரபாணி, சட்டாரா