மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான அட்டவணை வெளியாகிய நிலையில், தொடர்ந்து இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட அவர், ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார் என்று தெரிய வந்தது.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில், முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் உள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதல் நிலை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 2வது விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். சிஎஸ்கே அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமல்லாமல் இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ஐதராபாத் அணியில் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிரடியான ஃபார்மில் உள்ள ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், கலீல் அஹ்மத், முகேஷ் குமார் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது கேள்வியை எழுப்பியுள்ளது.