IND vs ZIM: எங்க ஒரு மும்பை வீரர் கூட இல்ல.. இஷான் கிஷனுக்கு ஆப்பு வைத்த அகர்கர்.. கைவிட்ட அம்பானி!
மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மும்பை அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன், திலக் வர்மா உள்ளிட்டோர் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மும்பை லாபி முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரியான் பராக், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரெல் உள்ளிட்டோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நடராஜன், ஹர்சித் ராணா, ரஜத் பட்டிதர், யாஷ் தயாள், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மும்பை அணியில் இருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது அந்த அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இளம் வீரர் திலக் வர்மா இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ஆடிய அவர், இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் இடம்பிடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் இன்னொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் நட்சத்திர வீரரான இஷான் கிஷன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஏற்கனவே பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டார். அது முழுக்க முழுக்க தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் முடிவு என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.
இதனால் இஷான் கிஷன் மீதான ஒழுங்கு நடவடிக்கை காரணமாகவே அவர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. வழக்கமாக மும்பை அணிக்காக விளையாடினாலே, இந்திய அணி தேர்வு குழுவின் பார்வை அந்த வீரரின் மேல் விழும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறை இரு நட்சத்திர வீரர்களும் தேர்வு செய்யப்படாததால் விவாதங்கள் எழுந்துள்ளன.
Story first published: Monday, June 24, 2024, 19:55 [IST]
Other articles published on Jun 24, 2024


Click it and Unblock the Notifications